அருள்வான்: பழங்குடியின சிறுமியின் கல்வி கனவு

மலையை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பழங்குடியின மக்களுக்கு, அடிப்படை வசதிகூட செய்து தராமல் அவர்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டும் அதிகாரவர்க்கம் காலம் காலமாக தன் திருப்பணியை செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மலைகிராமத்தில் பிறந்த சிறுமிக்கு தான் படித்து சாதிக்க வேண்டும் என்கிற ஆசை வருகிறது. இதற்கு காரணம் படிக்காமல் கைநாட்டாக இருந்த தாத்தாவின் மரணம்.

ஆனால் ஊர்கட்டுப்பாட்டுபடி வயதுக்கு வந்த உடனேயே அவளுக்கு திருமணம் செய்து வைக்க தந்தை ஆரவ்வும், தாய் ரம்யா பாண்டியனும் ஏற்பாடு செய்கிறார்கள். கலெக்டரை சந்தித்தால் தன் ஊருக்கு பள்ளிக்கூடம் வந்து விடும் நாம் படித்து விடலாம் என்று நம்பும் அந்தச் சிறுமி திருமண ஏற்பாடுகள் நடக்கும்போதே ஊரை விட்டு நகர்புறத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறார். நகர்புறத்தின் கொடூர கரங்கள் அவளை பிய்த்து திண்ண முயற்சிக்கிறது. அதிலிருந்து தப்பி அவள் நேர்மையான
கலெக்டர் அருள்நிதியை சந்திக்கிறாள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

பழங்குடியின மக்களின் கல்வி கனவு பற்றி நிறைய படங்கள் வந்திருந்தபோதும், அதனை ஒரு கிரைம் திரில்லர் பாணியில் கொடுத்திருக்கிறா£ர் இயக்குனர் கணேஷ் விநாயகன். ஏற்கெனவே ‘தேன்’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர். காட்டை ஆக்கிரமிக்கும் கார்ப்பரேட்டுகள், அவர்களுக்கு உடந்தையாக நிற்கும் காட்டிலாகா அதிகாரிகள், மலையிடங்களில் கல்விக்கூடம் அமைப்பதற்கான நடைமுறை சிக்கல். நேர்மையான அதிகாரிகள் என படம் பல விஷயங்களை தொட்டுச் செல்கிறது.
பாதி படத்திற்கு பிறகு வந்தாலும் அருள்நிதி மனதில் நிறைகிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இப்படி ஒரு கலெக்டர் கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறார். சின்ன பார்வை, இதழோரம் புன்னகையிலேயே அத்தனை நடிப்பையும் தந்து விடுகிறார்.

சிறுமி கிருத்திகா பழங்குடியின சிறுமியாகவே வாழ்ந்திருக்கிறார். மழலை மொழிகளில் அவள் பேசும் அந்த தனித்துவ மொழி அத்தனை அழகு. தந்தையாக ஆரம் கொஞ்சம் மிகை நடிப்பை தந்திருந்தாலும் நேர்த்தியாக செய்திருக்கிறார். தாய் ரம்யா பாண்டியன் மலைவாழ் பெண்ணாகவே மாறி இருக்கிறார். காளி வெங்கட், கவிதா பாரதி, விடிவி கணேஷ் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காட்டிலாகா அதிகாரியாக வரும் ஜான் விஜய் நடிப்பு நம்பியார் காலத்தை சேர்ந்தது.

மொத்த மலையழகையும், அந்த அழகிற்கு பின்னால் இருக்கும் ஆபத்தையும் கச்சிதமாக கண்ணுக்கு தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை இனிமை, பாடல்கள் கதையோடு ரசிக்க வைக்கிறது. சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் பார்க்கத் தகுந்த, பார்க்க வேண்டிய படம் அருள்வான்.

Comments (0)
Add Comment