தி ஒடிசி: காவிய பிரமாண்டம்

சர்வதேச இலக்கிய உலகில் முக்கியமான படைப்பாக கருதப்படும் ‘ஒடிசி’ காப்பியத்துக்கு திரை வடிவம் கொடுத்துள்ளார் உலக புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். ட்ராஜன் போரில் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இத்தாகா நாட்டின் மன்னனான ஒடிசியஸ் தாய்நாடு திரும்பக் கடலில் பயணமாகிறார். அந்த பயணத்தில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள்தான் திரைக்கதை.

பல ஆண்டுகள் கடந்தும் ஒடிசியஸ் வீடு திரும்பாததால், இத்தாகா நாட்டில் அவனது மனைவி பெனிலோப்பையும் (ஆனி ஹாத்வே) அரண்மனையையும் கைப்பற்றி, அவரை திருமணம் செய்ய ஒரு பேராசை கும்பல் சூழ்ச்சி செய்கிறது. ஒடிசியஸின் மகன் டெலிமக்கஸ் (டாம் ஹாலண்ட்) ஒருபுறம் தன் தந்தையைத் தேட, மறுபுறம் ஒடிசியஸ் தனது சாதுர்யத்தால் அத்தனை தடைகளையும் கடந்து, தன் நாட்டுக்கு எப்படி திரும்புகிறார் என்பதே படத்தின் கதை.

முழுக்க முழுக்க ஃபேண்டசி கதையான இதை எந்த வித வண்ணபூச்சும் இல்லாமல் நிறைவாக கொடுத்திருக்கிறார் நோலன். மேட் டாமன் ஒடிசியாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘ஸ்பைடர்மேன்’, டாம் ஹாலண்ட் முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார். அவரது தாயாக அதாவது ஒடிசியின் மனைவியாக நடித்துள்ள ஆனி ஹாத்வே தன்னுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். இவர்களுடன் ஹிமேஷ் படேல், ஜான் லெகுவிஸாமோ ஆகியோர் ஒடிசியஸின் நிழலில் வாழும் மனிதர்களாக நல்ல நடிப்பை தந்துள்ளனர்.

சிஜிஐ மற்றும் க்ரீன் மேட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் காட்சிகளை பதிவு செய்துள்ளார் நோலன். பிரமாண்ட குதிரை, கடல் புயல், சுழல், ஒற்றைக் கண் ராட்சத மனிதன், மனிதர்களை பன்றிகளாக்கும் சூனியக்காரி என காட்சிக்கு காட்சி பிரமாண்டம் காட்டியிருக்கிறார். உலகம் முழுவதும் படிக்கப்பட்ட ஒரு காவியத்தை ஓவியமாக தந்திருக்கிறார் நோலன்.

Comments (0)
Add Comment