பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” படம் சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கி இருந்தார். அர்ஜுன் தாஸ், அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து படத்தில பணியாற்றிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது.
இதில் அர்ஜுன் தாஸ் பேசியதாவது: படம் வெளியான பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம். அங்கு குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை ரசித்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த வெற்றிக்கான முழு பாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கே சேரும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. கதை சொல்லும்போதே இந்தப் படத்தில் ஒரு கனவு நடிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது நிஜமாகியிருக்கிறது. இவ்வளவு மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன்.
இந்தப் படத்தில் முதல் முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை “அப்பா” என்று அழைத்தபோது ஒரு புதிய உணர்வு ஏற்பட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை “அப்பா” கதாபாத்திரத்திற்கே அதிகம் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய திரைப்படம் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விஷயம். குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகையால், சிறிய படங்களை மக்கள் திரையரங்கிற்கு வரவழைப்பது பெரிய சவாலாக மாறிவிட்டது. ஆனால் நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது, அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்காகவே இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தோம்.
இப்போது பெரும்பாலான திரைப்படங்கள் 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை. சில நாட்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகின்றன. அதனால், “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை உங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நடிகரின் சந்தை மதிப்பையோ, முந்தைய படங்களையோ மட்டும் பார்த்து முடிவு செய்யாமல், படத்தின் உள்ளடக்கத்தை நம்பி எங்களுடன் இணைந்தது தயாரிப்பாளரின் திரைப்படப் பற்றைக் காட்டுகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இந்தப் படம், மொத்தம் சுமார் 95 கால்ஷீட்களில் உருவானது. அந்த நீண்ட பயணத்தில் என்னுடன் இணைந்து உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பங்களிப்பும் அளவிட முடியாதது.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துக்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து சொல்லியிருந்த “கான் சிட்டி”, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்றார்.