சொந்தமாக விமானம் வைத்திருக்கும் அளவிற்கு பெரிய கோடீஸ்வர குடும்பத்தின் ஒரே வாரிசு சஞ்சய் விஸ்வநாத், (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ளும் படி நிர்மலா வற்புறுத்துகிறார்.சிறுவயதில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றின் காரணமாக திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் சஞ்சய்.
இந்நிலையில், தாயின் ஆசையை நிறைவேற்ற வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மேடி (மமிதா பைஜூ) மூலமாக வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சஞ்சய். அம்மாவின் ஆசைக்காக சூர்யா, பணத் தேவைக்காக மமிதா இருவரும் பெற்றுக் கொண்ட குழந்தைக்கு இருவரும் எப்படி நிஜ பெற்றோராக மாறுகிறார்கள். அதற்கான காரண காரியங்கள் எப்படி நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
பக்காவான ஆக்ஷன், அலட்டல் இல்லாத ஹியூமர், நேர்த்தியான எமோஷன் என விஸ்வநாத் கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ் லுக், க்ளாஸ் மேனரிஸத்தால் படத்தைத் தாங்குகிறார் சூர்யா. அவ்வப்போது கஜினி சஞ்சய் ராமசாமியையும் நினைவூட்டுகிறார். சுட்டித்தனம், குறும்பு, நடனம் என படத்திற்கு கலகலப்பு வண்ணம் பூசியிருக்கிறார் மமிதா. சென்டிமெண்ட், காமெடி இரண்டையும் தனது அனுபவத்தால் தாங்கி பிடிக்கிறார் ராதிகா.
ரவீனா டாண்டன், சுனில், ராஜீவ் மேனன், நாசர், காளி வெங்கட், பவானி ஸ்ரீ, ஜார்ஜ் மரியன் போன்றோர் பங்கு குறைவுதான் என்றாலும் அதனை அழகாக பதிவு செய்துவிட்டுப் போகிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஆர்ப்பாட்டமில்லாத பின்னணி இசை படத்திற்கு பலம். ரொம்ப நாளைக்கு பிறகு கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சென்டிமெண்ட் விருந்து.