ஒன்ஸ்மோர் படத்தில் குறைவான சம்பளத்தில் நடித்த அதிதி சங்கர்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள படம் ஒன்ஸ்மோர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது இந்த விழாவில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது:

இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.
இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.

இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.

அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம்.

Comments (0)
Add Comment