தாய் நிலம்: போரின் வலி

ஈழப்போராட்டங்கள் பற்றியும், ஈழத் தமிழர்கள் பற்றியும் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளது. இந்த படம் ஈழப் போரில் இருந்து தப்பி தன் மகளை தமிழ்நாட்டில் உள்ள அவளது தாய்வழி சொந்தங்களிடம் ஒப்படைக்க வரும் தந்தையின் கதையாக இது வெளிவந்துள்ளது.

ஈழத்தில் பிறந்து வளர்ந்தவர் அமர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ குழுவில் சென்ற அவரை காதலித்து, திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகி விடுகிறார் நிமிஷா நம்பியார். அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறார் (நேகா அமர்). யுத்தத்தில் தாய் இறந்து விட மகளை தாய்வழி சொந்தத்திடம் ஒப்படைக்க தமிழ்நாட்டுக்கு வருகிறார் அமர். ஆனால் சட்டம் அதற்கு தடையாக இருக்கிறது. கிராமத்து மக்களான பாலாசிங் உள்ளிட்ட சில ஆட்டோ டிரைவர்கள் அவர்களுக்கு உதவ அவர், அந்த ஊரிலேயே தங்கி காய்கறி வியாபாரம் செய்து மகளை படிக்கவும் அனுப்புகிறார். ஆனால் எதிர்பாராத ஒரு சம்பவம் எல்லாவற்றையும் புரட்டிப் போடுகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கதை.

ஈழ மக்களை தமிழக மக்களும், அரசும் அகதியாக பார்ப்பதும், ஈழத்தில் இருந்து வந்தால் சொந்தபந்தங்களுமே புறக்கணிப்பதும் யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உதவும் மனம் கொண்ட மக்களையும் அடையாளம் காட்டுகிறது. படத்தை தானே இயக்கி, நடித்து ஒற்றை ஆளாக படத்தை சுமந்திருக்கிறார் டாக்டர் அமர் ராமச்சந்திரன். மகளாக நடித்திருக்கும் நேகா அமர், முகத்தில் அப்பாவித்தனத்தையும், ஏக்கத்தையும் படு யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஈழத்தில் இருந்து வரும் மக்களை, இப்போதும் அகதி முகாமில் வாழ்பவர்களை சக மனிதர்களாக மதித்து அவர்களுக்கு உரிமையும், உதவியும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திய விதத்தில் கவனம் பெறுகிறது இந்த தாய்நிலம்.

Comments (0)
Add Comment