சரண்டர்: காவல்துறை அரசியலும், அரசியல் வன்முறையும்

இன்னும் 6 மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் காவல் நிலைய ரைட்டர் லால். தேர்தல் நேரத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையத்தில் சரண்டர் செய்கிறார்கள். அதை பாதுகாக்கும் பொறுப்பு லாலுவுடையது. அவரிடமிருந்த ஒரு துப்பாக்கி காணாமல் போகிறது.

தேர்தலுக்காக பல கோடி ரூபாய்கள் தாதா சுஜித் மூலம் பல இடங்களுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. அதில் ஒரு தொகை மிஸ்சிங். இந்த காணாமல் போன பணத்திற்கும், துப்பாக்கிக்கும் என்ன சம்பந்தம் என்பதை சொல்வதுதான் படம்.

மலையாள சினிமா பாணியில் ஒர பரபர கிரைம் திரில்லரை தந்து அதன் மூலம் காவல்துறை, அரசியல்வாதிகள், தாதாக்களுக்கு இடையே உள்ள கள்ளக் காதலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் கவுதமன் கணபதி.

படத்தில் லால் நடிக்கிறார் என்கிறபோது அந்த படத்திற்கு தானாகவே பாஸ் மார்க் போட்டுவிட முடியும், காரணம் எந்த கேரக்டராக இருந்தாலும் அதை தன் முதுகில் சுமந்து படத்தையும் சேர்த்து சுமப்பவர், இந்த படத்திலும் அப்படியே. தர்ஷன் கேரியரில் இது முக்கியமான படம். ஒரு பயிற்சி காவலரின் பதட்டத்தையும், அநியாயத்தை கண்டு பொங்கும் இளைஞனின் துடிப்பையும் சரியான மீட்டரில் வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லன் சுஜித் சரியான தேர்வு. முனீஷ்காந்த் கோஷ்டியின் காமெடி சிரிக்க வைத்தாலும் படத்தோடு ஒட்டவில்லை.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு காவல் நிலைய காட்சிகளை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. விகாஷின் பின்னணி இசை படத்திற்கு பலம். கிரைம் திரில்லர் என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாதபடி சமூக பிரச்சினைகளையும் பேசியிருப்பதால் ரசிகர்களும் தியேட்டரில் சரண்டராகலாம்.

Comments (0)
Add Comment