கிங்டம்: காரம், சுவை நிறைந்த ஆந்திரா மீல்ஸ்

3 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான ‘ஜெர்சி’ படத்தை இயக்கிய கவுதம் தின்னனூர் இயக்கி உள்ள படம். தெலுங்கு டாப் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் கைகோர்த்திருக்கும் படம்.

ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் விஜய் தேவரகொண்டா. முரட்டு குணமும், புத்திசாலித்தனமும் கொண்டவர். சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போன தனது அண்ணன் சத்யதேவை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார்.

விஜய்யின் கேரக்டர் பிடித்துப்போகும் உயர் அதிகாரிகள், அவருக்கு ஒரு அண்டர்கவர் அசைன்மெண்ட் கொடுக்கிறார்கள். அதை செய்து முடித்தால் அதில் அவர் அண்ணனையும் கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள். இதனால் அதற்கு உடன்பட்டு இலங்கை கிளம்புகிறார் விஜய்.
அண்டர்கவர் ஆபரேஷனில் வெற்றி பெற்றாரா? அண்ணனை கண்டுபிடித்தாரா என்பது மீதி கதை. பரபரப்பாக தொடங்கும் கதை, அடுத்தடுத்து நகர்ந்து முடியும் வரை எந்த தொய்வும் இன்றி பயணிக்கிறது.

அதீத ஹீரோயிசங்கள் பெரியளவில் எதுவுமின்றி ஓரளவு நம்பகத்தன்மைகளை காட்சிகளில் இடம்பெறச் செய்தது ரசிக்க வைக்கிறது. விஜய் தேவரகொண்டாவுக்கு நடிகராக முக்கியமான படம் இது. போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து பின்னர் இலங்கைக்கு சென்ற பின் அவருள் ஏற்படும் மாற்றம் என தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதீத உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார்.
அவருடைய அண்ணனாக வரும் சத்யதேவும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். பாக்யஸ்ரீக்கு அதிக வாய்ப்பு இல்லை. வில்லனாக வரும் வெங்கடேஷ் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

படத்தின் மற்ற ஹீரோக்கள் இசையமைப்பாளர் அனிருத்தும், ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோரும்தான். பாடல்களிலும் பின்னணி இசையிலும் அனிருத் பின்னியெடுத்திருக்கிறார் .

பரபர ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு சுடச்சுட பரிமாறப்படும் ஆந்திரா மீல்ஸ்.

Comments (0)
Add Comment