மெஸன்ஜர்: மெஸன்ஜர் காதலும், காலத்துக்கேற்ற மெசேஜும்

புதிய இளைஞர்கள் புதிது புதிதாக சிந்திக்கிறார்கள். மக்களின் தொடர்புக்கு கண்டுபிடிக்கப்பட்ட பேஸ்புக் தளத்திலும், காதல், திருமணம், ஆவி என புகுத்தி புதிதாக சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி.

சென்னையில் வாழும் நாயகன் சக்தியை (ஸ்ரீராம் கார்த்திக்) கிராமத்தில் வாழும் ஆனந்தி(பாத்திமா நகும்) பேஸ்புக் மூலம் ஒருதலையாய் காதலிக்கிறார். இந்த நிலையில் ஆனந்தி ஒரு விபத்தில் இறக்கிறார், சக்தி தன் காதலி தீப்தியை (மனிஷாஸ்ரீ) பிரிகிறார். இறந்த பிறகும் போன் மெஸன்ஜர் மூலம் தன் காதலை தொடர்கிறார் ஆனந்தி. இது சக்தியின் வாழ்க்கையில் என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை.

புதுமையான இந்த கதைக்கு, பால கணேசனின் ஒளிப்பதிவும், அபூபக்கரின் இசையும் கச்சிதமாக உதவி இருக்கிறது. துணிச்சலாக இந்த கதையை தயாரித்த வி.விஜயனும்(பிவிகே பிலிம் பேக்டரி) பாராட்டுக்குரியவர்.

‘கன்னிமாடம்’ படத்திற்கு பிறகு ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். காதலிக்கும், ஆவிக்கும் இடையில் கிடந்து அவர் படும் கஷ்டம் ரசிக்க வைக்கிறது. அசல் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் பாத்திமா நகும்.

மனிஷாஸ்ரீக்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் கொடுக்கப்பட்டட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். தோழியாக வரும் வைஷாலி ரவிச்சந்திரன், நண்பனாக வரும் ஜீவா ரவி, போலீஸ் அதிகாரி லிவிங்ஸடன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

முன்பகுதி கதையை ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷனாக தொடங்கி பின் பகுதியை ஆவி, ஆன்மா என முடித்திருக்கிறார்கள். அந்த கிளைமாக்ஸ் டூவிஸ்ட்டும் சர்ப்ரைஸ்.

ஆவியின் காதல் என்கிற ஆன்மீக கதையாக இருந்தாலும் செல்போன்களால் பெண்களுக்கு இருக்கிற ஆபத்தை உணர வைத்த வகையிலும் இது முக்கியமான படமாகிறது.

Comments (0)
Add Comment