வித் லவ்: காதலின் புதிய பார்வை

மனித மனத்தின் மென்மையான பக்கங்களை மட்டும் நிதானமாகத் தொட்டுத் திறக்கும் கதை. கிராஃபிக் டிசைன் வடிவமைப்பாளராக இருக்கிறார் சத்யா (அபிஷன் ஜீவிந்த்). அவருக்குப் பெண் பார்த்து திருமணம் முடிக்க, இணையத் திருமணம் தளம் வழியாக அவனுடைய அக்காவால் ‘விருப்பம்’ தெரிவிக்கப்பட்ட பெண் மோனிஷாவை (அனஸ்வரா ராஜன்) காபி ஹவுஸ் ஒன்றில் சந்திக்கிறார் சத்யா.

இந்த சந்திப்பின் போது இருவரும் திருச்சியில் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரியவருகிறது. இருவரும் தங்கள் பள்ளி நாள்களில் வெவ்வேறு சக மாணவர்களை ஒருதலையாகக் காதலித்த நினைவுகளைப் பரஸ்பரம் பகிர்ந்து நினைவு கூர்கிறார்கள்.
அப்போது, மோனிஷா, ‘நம் இருவருடைய முன்னாள் காதலர்களையும் தேடிப்பிடித்துச் சந்தித்து, அப்போது வெளிப்படுத்த முடியாமல் போன காதலை இப்போது வெளிப்படுத்தி நம் மனதைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். அதன்பிறகு நாம் வாழ்க்கையில் இணைவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்’ என்கிறாள். முதலில் இதை ஏற்க மறுக்கும் சத்யா, பிறகு ஒப்புக்கொள்கிறான். இந்தப் புதிய, உணர்ச்சிகரமான பயணத்தின் வழியே அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா? குறிப்பாகக் காதலின் முழுமை எதிலிருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தார்களா என்பது கதை.

சத்யாவாக வரும் அபிஷன் ஜீவிந்த் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மோனிஷாவாக வரும் அனஸ்வரா ராஜன் அவருடன் போட்டிபோட்டு நடித்திருக்கிறார். தன்னம்பிக்கை, குறும்பு, பொதுச் சமூகத்தை எதிர்கொள்வதில் காட்டும் துணிவு என ஜென் இசட் தலைமுறை பெண்ணை தன் துடிப்பான நடிப்பால் கண்முன் நிறுத்துகிறார் அனஸ்வரா ராஜன். அனிஷாவாக வரும் காவ்யா அனில் நடிப்பும் அட்டகாசம்.

ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்குத் துள்ளலும் ரம்மியமும் கலந்து தந்திருக்கிறது. ஒரு ஃபீல்குட் நகைச்சுவை காதல் படத்தை அழகாக தந்திருக்கிறார்கள்.

Comments (0)
Add Comment