23 வயது கென்னை நம்பிய தயாரிப்பாரை பாராட்டுகிறேன்: தனுஷ்

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2’ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘யூத்’. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மார்ச் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது: முதலில் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு பாராடுக்கள். 23 வயது இளைஞன் சொன்ன கதையை நம்பி இந்த படத்தை தயாரித்தது மிகப் பெரிய தைரியம். நாளை இந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முதல் உரிமையாளர் கருப்பையாதான். கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

ஒரு படத்திற்கு ஒரு அடையாளம் இருக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா எப்படி இருந்தாரோ, அதேபோல் ‘யூத்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறார். பணம் வாங்காமல் அவர் இசையமைத்தது தந்தது அவரது பெருமை. அவருக்கு கென் சார்பில் என் நன்றி.

படத்தில் நடித்த சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் வாழ்த்துகள். அனிஷ்மா சிறை படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் விக்கி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் இந்த படத்திற்கு ஒரு பெரிய வலிமையாக உள்ளனர்.

அசுரன் படத்தில் முதலில் கென்னைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் முதல் ஷாட்டிலேயே அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவரை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றிமாறனுக்கே சேரும்.

இந்த வயதிலேயே இவ்வளவு தைரியமாக படம் எடுக்க முடிவு செய்தது பெரிய விஷயம். அவர் படமெடுக்கிறேன் என்று சொன்ன போது, நான் இப்போது வேண்டாமே என்றேன் ஆனா அதை
தவறென்று நிரூபித்திருக்கிறார்.

நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாங்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது. இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கேன் தனது கவனத்தை முழுவதும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கென்னுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள். என்றார்.

விழாவில் கருணாஸ், கிரேஸ் கருணாஸ், ஜி.வி.பிரகாஷ், வெற்றி மாறன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

Comments (0)
Add Comment