கெணத்த காணோம்: சிரிப்பும், சிந்தனையும்

குடிநீர் இன்றி வறட்சியான கிராமமான கோடங்கிப்பட்டியில் கோவில் பூசாரியாகவும் சாமி சிலைகளை வடிக்கும் சிற்பியாகவும் இருக்கிறார் யோகி பாபு. நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடும் தண்ணீர் பிரச்னையில் தவிக்கிறது அக்கிராமம். தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அங்கு கிணறு வெட்டத் திட்டமிடுகிறார்கள் ஊர் மக்கள். அப்படி கிணற்றுக்காக குழி தோண்டுகையில் பல பிரச்னைகளும் கிளம்புகின்றன. கிணறு வெட்ட பூகம்பம் கிளம்பின மாதிரி, கிணறு வெட்ட டைனோசர் கிளம்புகிறது. இதனை எப்படி கிராம மக்கள் சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

காதல், குடும்ப பாசம், ஊர் மீதான அக்கறை எனப் பொறுப்பாக கதாபாத்திரத்தை கவனத்தோடு செய்திருக்கிறார் யோகி பாபு. அவரது காதலியாக வரும் லவ்லின் சந்திரசேகருக்கு நடிப்பில் பெரிய வேலை இல்லை. ஊர் மக்களாக வரும் ஹலோ கந்தசாமி, ஊர்த்தலைவர் ஆகியோர் கலகலப்பூட்டுகிறார்கள்.

வறண்ட நிலங்கள் தரும் வெக்கையையும், கிராமத்து மண் வீடுகளின் எதார்த்தத்தையும் ஒளியமைப்பில் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வி. தியாகராஜன் நிவாஸ் கே பிரசன்னா பாடல்கள் பரவாயில்லை ரகம். அரசு இயந்திரங்கள் எப்படி மக்களுக்குப் பிரச்னைகளை விளைவிக்கிறது, அவர்கள் மீது எப்படியான வழிகளில் அதிகாரப் பலத்தைக் காட்டுகிறது என்பதை கிராமப் பின்னணியில் சொல்லியிருக்கிறார் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா.

‘ஆராய்ச்சி என்பது மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, அது மக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது’ என்பதையும், அரசு இயந்திரங்களின் அதிகார முகத்தையும் காட்டுகிறது படம்.

நிறைய சிரிக்கவும், கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறது படம்.

Comments (0)
Add Comment