சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. வரவேற்பை பெற்று தற்போதும் தியேட்டர்களில் ஒடிக் கொண்டிருக்கிறது. விரைவில் ஒடிடி தளத்திலும் வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தில் பணியாற்றிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு யோகி பாபு பேசியதாவது: “இந்தத் திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ரமேஷ் சார், ஜியோ ஸ்டார் நிறுவனம் மற்றும் எனது அருமைத் தம்பி இயக்குநர் சுரேஷ் சங்கையா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் வேளையில், அதன் நாயகனாக இருந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் மறைந்தாலும், அவர் ஆசைப்பட்டபடியே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் முதல் நன்றியைத் உரித்தாக்குகிறேன்.
ஒரு இயக்குநர் இல்லாத சூழலில், அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். தயாரிப்பாளர் ரமேஷ் அவர்கள் அந்த வலியைத் தாங்கிக்கொண்டு, மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்தப் படத்தை வெளியிட்டார். நான் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து அவரிடம் விசாரிப்பேன். இன்று படம் வெற்றி பெற்றிருப்பது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். உங்களைப் போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி.
நான் தற்போது 300 படங்களைக் கடந்து நடித்து வருவதாகப் பலரும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, காமெடி படங்களை மட்டுமே பண்ணாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நீங்கள் நடிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் அன்புக் கட்டளை இட்டுள்ளனர். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் நகைச்சுவை மட்டுமல்லாது, மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை உரக்கச் சொல்லும் கதைகளாக இருந்தால் நிச்சயம் அதில் முன்னின்று நடிப்பேன். என்னைத் தேடி வரும் அத்தகைய நல்ல கதைகளுக்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.” என்றார்.