ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.
இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்வினில் நடிகர் பரத் பேசியதாவது: ‘காளிதாஸ்’ 2019-ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.
இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இது என் படமென்பதற்காக மட்டுமல்ல, இந்தப் படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்து செல்லும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது.
என் கூட நடித்த நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பவானி இந்தப் படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சங்கீதா மேம் உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரிய மகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.
அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம். இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ். சார், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி.,” என்றார்.