‘காலம் மாறலாம் காதல் மாறாதுக் என்பதெல்லாம் பழசாகிப்போன பஞ்சாங்கம். காலத்திற்கேற்ப காதலும் மாறும் என்பதுதான் புதுமொழி. அதனை அழகாக யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா. செல்லமே, ஆனந்த தாண்டவம் என அற்புதமான படங்களை தந்தவர் ஒரு இடைவெளிக்கு பிறகு அதே தரத்தோடு திரும்பி வந்திருக்கிறார். 25 வருட இடைவெளியில் ஏற்படும் காதல் மாற்றத்தை அற்புதமாக தந்திருக்கிறார்.
தொழிலதிபரின் சம்பத்ராஜின் மகளான நாயகி ரோஸ்மின், சரியான வேலையின்றி கஷ்ட்டப்படும் கிராமத்து திறமையான இளைஞர் நாயகன் ராணவுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார். இவர்களது நட்பு காதலாக மாற, அவரையே தனது கணவராக்கி அந்த கம்பெனிக்கே உரிமையாளராக்குகிறார்.
ஆனால், இவர்களது காதலர்களாக இருந்த போது இருந்த மகிழ்ச்சி, திருமணத்திற்கு பிறகு இல்லை. ஈகோ தலை தூக்குகிறது. பெற்றவர்களுக்காக மணந்தவளை புறக்கணிக்கிறார் ராணவ், இவ்வளவு பெரிய வாழ்க்கை கொடுத்த தனக்கு உரிய மரியாதை தர மறுப்பதாக நினைக்கிறார் ரோஸ்மின். இந்த ஈகோ பெரும் பிரிவை ஏற்படுத்தி அது எப்படி தலைமுறை தாண்டி எதிரொலிக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ், ஆச்சர்யப்படும் நடிப்பை தந்திருக்கிறார். பெற்றோருக்கும், மனைவிக்கும் இடையிலா தவிப்பை மீட்டர் தாண்டாமல் தந்திருக்கிறார்.,
நாயகியாக நடித்திருக்கும் ரோஸ்மின்,முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து கவனம் ஈர்க்கிறார். பணக்காரத் திமிர், தீவிரமான காதலர் இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார். மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் ஜோடிகலகல ஏரியாவை கவனித்துக் கொள்கிறார்கள்.
நாயகியின் தந்தையாக சம்பத் ராஜ், மருத்துவராக கஸ்தூரி, நாயகனின் அம்மா அர்ச்சனா ஆகியோரது அனுபவ நடிப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது. எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக, கண்ணுக்கு குளிர்ச்சி.
ஜி.வி.பிரகாஷ் கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம்.
முன்பகுதி இளமை ததும்பும் பழைய கதை. பின்பகுதி ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா டச். காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம், படிக்க வேண்டிய பாடம்.