கர: காரம், வீரம் கொண்ட கிராமத்து குலசாமி

‘இட்லி கடை’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த தனுசும், ‘போர் தொழில்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த விக்னேஷ் ராஜாவும் இணைந்து கொடுத்திருக்கும் மற்றுமொரு வெற்றிப் படம்.

அப்பாவி மக்களை ஏமாற்றி சுரண்டும் தனியார் வங்கிகள், விசாயம் பொய்த்து விவசாயிகளின் வாழ்வும் பொய்யாகும் யதார்த நிலை, பிடுங்கியவனிடம், திரும்பி பிடுங்கத்தான் வேண்டும் என்கிற யதார்தம். இவற்றை ஒருங்கிணைத்து அதனை பக்கா கமர்ஷியல் பேக்கேஜில் தந்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. அதற்கு தன் உழைப்பை கொடுத்திருக்கிறார் தனுஷ்.

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில், ஒரு எம்எல்ஏ வீட்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் கர என்கிற கரசாமி (தனுஷ்), போலீஸிடம் சிக்கிக்கொள்கிறார். உடன் சென்ற நண்பன் பிருத்வி பாண்டியராஜன் தப்பி விடுகிறார். போலீஸ் பிடியிலிருந்து தப்பி, தன் மனைவி செல்லியுடன் (மமிதா பைஜூ) ஆந்திராவுக்குச் சென்றுவிடுகிறார். அங்கு திருந்தி நல்லவனாக வாழ்கிறார்.

சில நாட்களுக்குப் பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கும் அவர், கையில் போதுமான பணம் இல்லாததால், சொந்த ஊரிலிருக்கும் நிலத்தை விற்று அதில் தனக்கு தேவையான பணத்தை கொண்டு வர நினைக்கிறார். அதற்காகச் சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு வருகிறார்.

அங்கு ஏற்கெனவே அவருடைய தந்தை கந்தசாமி (கே.எஸ்.ரவிகுமார்) அந்த நிலத்தை அடமானம் வைத்து, வாங்கிய டிராக்டருக்கு வட்டி பணம் செலுத்த முடியாத சிக்கலில் இருக்கிறார். இதனை விற்றுவிட நினைக்கும் கரசாமியின் முடிவுக்கு அவருடைய தந்தை கந்தசாமி மறுப்பு தெரிவிக்கிறார். செத்தாலும் இந்த மண்ணில்தான் புதை’க வேண்டும் என்கிறார். அடுத்த சில நாளில் செத்தும் போகிறார்.

ஆனால் பிணத்தை நிலத்தில் புதைக்க ஜப்தி நோட்டீஸ் கொடுத்த வங்கி அனுமதிக்க மறுக்கிறது. இதனால் தந்தையை அநாதை பிணம் என்று கூறி அரசு ஆஸ்பத்திரியில் போட்டு விட்டு எந்த வங்கி தந்தையை ஏமாற்றியதோ அதே வங்கியில் பணத்தை கொள்ளையடித்து தன் தந்தையின் இறுதி சடங்கை நடத்த திட்டமிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

திருடன், தேவைக்குப் பணமின்றித் தவிக்கும் ஒருவனுக்கு வரும் புற அழுத்தம், என கரசாமிக்கு உயிரூட்டியிருக்கிறார் தனுஷ். மனைவி, மாமாவிடம் கலங்கிய கண்களோடு ஆக்ரோஷமாகப் பேசும் இடங்களில், கரசாமியின் அழுத்தம் நிறைந்த மனவோட்டத்தைப் பார்வையாளர்களுக்கும் கடத்திவிடுகிறார்.குறைவான திரை நேரத்தில் வந்தாலும், செல்லியாக அழுத்தம் திருத்தமான நடிப்பைத் தந்து போகிறார் மமிதா பைஜூ. தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் நோக்கத்திலேயே இருக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு நல்ல சாய்ஸ்.

மாமா காசி மாயனாக கருணாஸ், நயவஞ்சகம் செய்யும் கதாபாத்திரத்தில் ஜெயராம், தந்தையாகக் கே.எஸ். ரவிக்குமார் தாயாராக வரும் ஸ்ரீஜா ரவி, எல்லோருமே தங்கள் பங்கை சரியாக செய்திரு’கிறார்கள். வெயில் தேசத்தை அதே வெப்பத்தோடு பதிவு செய்திருக்கிறார் தேனி ஈஸ்வர். ஜி.வி. பிரகாஷ் பாடல்களில் ‘வாயா ஏன் கரசாமி’ பாடல், ஆரத்தி எடுத்து கரசாமிக்கு அருள் ஏற்ற, ‘கண்ணம்மா கண்ணம்மா’, ‘ஐயா ஐயா’ பாடல்கள் மனதில் நிறைகிறது.

திருடனாக இருந்த கரசாமி, காரமும், வீரமும் நிறைந்த குலசாமி

Comments (0)
Add Comment