சாருகேசி: சங்கீத வித்வானின் தியாக வாழ்க்கை

சங்கீத மேதையாக சமுத்தாயத்தில் வலம் வருகிறவர் சாருகேசி (ஒய்ஜி.மகேந்திரன்). அவரது தம்பி தலைவாசல் விஜய்யும் மனைவி சுஹாசினியும் அவர்தான் உலகம் என்று வாழ்கிறார்கள். ஆனால் அவரது மகன் எப்போதும் தந்தைக்கு எதிராகவே நிற்கிறார். அவர் திடீரென ஒரு நாள் ரம்யா பாண்டியனை திருமணம் செய்து கொண்டு சாருகேசி வீட்டுக்கு வருகிறார்.

வீட்டுக்கு திடீர் மருமகளாக வந்த ரம்யா பாண்டியன் சாருகேசி பல வருடங்களாக மறைத்து வைத்திருக்கும் ஒரு ரகசியத்தைச் சொல்லி மிரட்டுகிறார், சாருகேசிக்கு அல்சைமர் என்ற ஞாபகமறதி நோயும் வருகிறது. உண்மையில் ரம்யா பாண்டியன் யார்? சாருகேசி குணம் அடைந்தாரா? மகன் தந்தையை புரிந்து கொண்டாரா என்பதுதான் படத்தின் கதை.
அனுபவ நடிப்பால் சாருகேசியாகவே வாழ்ந்திருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய்யும், சுஹாசினியும் சென்டிமெண்டில் கலங்க வைக்கிறார்கள். ரம்யா பாண்டியன் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டுகிறார். சத்யராஜ் இரண்டு காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு இசை சாம்ராஜ்யத்தை கொண்டு வந்திருக்கிறார் தேவா. பாட்ஷா, அண்ணாமலை போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படத்தை தந்திருக்கிறார். நடிப்பு, இசை, ஒளிப்பதிவு எல்லாமே சம அளவில் பங்களிப்பு செய்து தரமான படமாக வந்திருக்கிறது.
சிந்து பைரவி, சங்கராபரணம் பாணியிலான பட பிரியர்கள் மட்டுமல்ல பொதுவான ரசிகர்களும் காணத்தகுந்த படம்.

Comments (0)
Add Comment