1970களில் மதுரையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகிராமத்தில் நடக்கும் கதை. அந்த மலைகிராம மக்கள் படிக்க வேண்டும் என்று விரும்பும் அழகு(நக்ஷத்ரா) அதற்கென ஒரு சிறிய பள்ளி வகுப்பறை உருவாக்கி வைத்து ஆசிரியருக்காக காத்திருக்கிறார். ஒரு நாள் ஆசிரியரும் வருகிறார். வந்த வாத்தியார் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை விட்டுவிட்டு அழகுக்கு காமப் பாடம் நடத்த முயற்சிக்கிறார். இப்படியான நிலையில் அவர் கொடூரமாக கொல்லப்படுகிறார்.
இதனை விசாரிக்கிறார் நேர்மையான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அமைதிராஜ் (இசக்கி கார்வண்ணன்). வாத்தியார் மட்டுமல்ல சுற்றிலுமுள்ள பல கிராமங்களில் 18க்கும் மேற்பட்டவர் பாலியல் குற்றவாளிகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். வாத்தியார் யார்? அவரை கொலை செய்தது யார்? சுற்று கிராமத்தில் தொடர் கொலைகளை செய்வது யார் என்பதும், அதை அமைதிராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதும் படத்தின் மீதி கதை.
அந்த காலத்தில் பெண்கள் தங்களை பாதுகாக்க ஒரு தனி ஆயுத படை வைத்திருந்தாகவும், அந்த ஆயுத படை பெண்களின் வாரிசுகள் இப்போதும் அந்த பணியை செய்து வருவதாகவும் ஒரு புனைவு கதையை சொல்லி, அதை மிரட்டலாக படமாக்கி, தமிழச்சிகளின் வீரத்தை பறைசாற்றி இருக்கிறார்கள்.
அதீத கற்பனை கதைதான் என்றாலும் பெண்களின் வீரம், பாதுகாப்பை பேசிய விதத்தில் கவனம் பெறுகிறது படம். சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும், சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு தரமான மலையாளப்படத்தை ஒத்திருக்கிறது. தீசனின் ஒளிப்பதிவும் படத்திற்கு உதவி இருக்கிறது.
டெரர் போலீஸ் அதிகாரியாக இசக்கி கார்வண்ணன் மிரட்டுகிறார். அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். நக்ஷ்திரா. மலைவாழ் பெண்ணாகவே மாறி இருக்கிறார். ‘மலையாள படங்கள் போன்று தமிழ் படங்கள் வருவதில்லையே’ என்று ஆதங்கப்படுகிறவர்கள் ஆட்டியை பார்க்க தியேட்டருக்கு ஒரு விசிட் போகலாம்.