கான் சிட்டி: ஏமாற்றாதே, ஏமாறாதே

ஏமாற்றி பிழைப்பவர்களே… ஏமாந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு காமெடி கதை சொல்லி, ‘ஏமாற்றாதீர்கள், ஏமாறாதீர்கள்’ என்ற மெசேஜும் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ்.

ஒருவனை காதலித்து ஏமாந்து, கர்ப்பமாகி தனித்து விடப்பட்ட அன்னா பென், பெரும் கடன் சுமையில் தவிக்கும் அர்ஜூன் தாஸ், ஒரு சினிமா படம் தயாரிக்க விரும்பும் சினிமா சண்டை இயக்குனரின் மனைவி வடிவுக்கரசி, மகன் யோகி பாபு. இவர்களுக்கு குறுக்கு வழியில் ஏமாற்றி சம்பாதிக்கும் வாய்ப்பு வருகிறது. அதை பயன்படுத்தி அவர்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அந்த பணத்தை பாதுகாக்க அவர்கள் அதனை ஓரிடத்தில் சேர்த்து வைக்கிறார்கள். அந்த பணத்தை ஒருவன் ஏமாற்றி அள்ளிச் செல்கிறான். ஏமாற்றி சம்பாதித்த பணத்தை இழந்தவர்கள் தங்களை ஏமாற்றிவனிடமிருந்து அதனை எப்படி மீட்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

மாஸ்டர், கைதி, விக்ரம் படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜூன் தாஸ் முதன் முதலாக காமெடியில் களம் இறங்கி உள்ள படம். அவர் சீரியசாகத்தான் நடிக்கிறார். ஆனால் அதனை பார்வையாளனுக்கு காமெடியாக கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார். அன்னாபென் அவரது கேரியரில் நடித்திராத ஒரு நெகட்டிவ் ஷேட் பாத்திரத்தில் முதன் முறையாக நடித்திருக்கிறார்.

கேரக்டர் எப்படி இருந்தாலும் தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் அன்னா பென். யோகி பாபு&வடிவுக்கரசி கூட்டணி காமெடிக்கு கியாரண்டி தருகிறது. அம்மா&மகன் சென்டிமெண்டை கூட காமெடியாக்கி சிரிக்க வைத்து விடுகிறார்கள். போதா குறைக்கு விடிவி கணேஷ், அருள்தாஸ் கூட்டணியும் தங்கள் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்கள்.

ஏமாற்றுகிறவர்கள் கதை நிறைய வந்திருந்தாலும், இது ஏமாற்றியவர்கள் ஏமாந்த கதை என்பதால் படத்தை நன்றாக ரசிக்க முடிகிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை சிரிக்கவும் வைக்கிறது, நெகிழவும் வைக்கிறது. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு டார்க் காமெடிக்கு ஏற்ற வண்ணத்தை தந்துள்ளது. நிறைய எண்டர்டெயின்மெண்ட், கொஞ்சம் மெசேஜ் வேண்டுகிறவர்கள் கான் சிட்டிக்கு விசிட் பண்ணலாம்.

Comments (0)
Add Comment