Yourbackers play: முதன் முதலாக லாப நோக்கமற்ற ஓடிடி தளம் தொடக்கம்

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ என்னும் இலாப நோக்கற்ற ஓடிடி தளத்தை தொடங்கி உள்ளது. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த தளத்தில் இலவசமாக திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். அதே சமயம் நாம் ஏதாவது பங்களிப்பு செய்ய விரும்பினால் அதையும் நன்கொடையாக தாராளமாக அளிக்கலாம். அந்த தொகையும் ஆதரவற்ற மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும்.இதன் தொடக்க விழா நடந்தது. இதில் யுவர்பேக்கர்ஸ் ஓடிடி நிறுவனர் கிஷோர் ஆதித்யா பேசியதாவது: யுவர்பேக்கர்ஸ் பவுண்டேஷன் துவக்கி 6 ஆண்டுகள் ஆகிறது. பாண்டிச்சேரியில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டோம். கடலுக்குள் சென்று கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கை கிளீன் செய்து கின்னஸ் சாதனை படைத்தோம். மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்கள் கூட எங்கள் சேவையை குறித்து பாராட்டினார். பெண்கள் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

சினிமாவை பொறுத்தவரை விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை நாங்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவில் வினியோகம் செய்தோம். தொடர்ந்து இன்ஃபினிட்டி, கழுமரம் போன்ற படங்களையும், அதனைத் தொடர்ந்து ‘மனிதம்’ படத்தையும் தயாரித்தோம்.

ஓடிடியிலும் மக்கள் பெரிய படங்களையே பார்க்க விரும்புகிறார்கள், முன் வருகிறார்கள். இந்த நிலையில் எங்கள் ஓடிடியின் மூலம் சின்ன படங்களை பார்க்க வைக்க ஒரு முயற்சி எடுத்திருக்கிறோம். இதில் சப்ஸ்க்ரிப்ஷன் கட்டணம் கிடையாது. இலவசமாக படத்தை பார்க்கலாம். இம்பாக்ட் டிக்கெட் என்ற ஆப்ஷன் உண்டு, அதில் பயனர்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். அந்த தொகையிலும் பெரும்பகுதி சமூக சேவைக்கு தான் செல்கிறது. மீதம் உள்ள ஒரு பங்கு திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும்.

இந்த ஓடிடியில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. இது பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களையும் தடுக்கும் ஒரு முயற்சி. மேலும் கிமி மூலம் திரைப்படங்களையும் உருவாக்க இருக்கிறோம். இது அடுத்த கட்டமாக செயல்பாட்டுக்கு வரும்.

அவுட் ரைட் முறையிலும், ஷேர் முறையிலும் படத்தை வாங்கி இந்த ஓடிடியில் வெளியிட இருக்கிறோம். இந்த ஓடிடியின் வளர்ச்சி பல சிறிய படங்களுக்கு நிரந்தர வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நாம் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. எதையும் எதிர்பாராமல் நம் கடமையை செய்து வந்தால் நாம் எதிர்பாராத நல்லது நமக்கு நடக்கும். ஆதரவு கொடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார், விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் எஸ்.வீ.சேகர், போஸ் வெங்கட் , மைம் கோபி, தயாரிப்பாளர் மதியழகன், யூகி சேது, கூல் சுரேஷ், மேலும் யுவர்பேக்கர்ஸ் சி இ ஓ ஜான் ஜூலியஸ், இயக்குனர் புருனோ, தயாரிப்பாளர் ஜேகே சரவணன், ஜேகே சதிஷ், ஸ்டார் ஹோம்ஸ் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

Comments (0)
Add Comment