பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய். என் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் ‘செல்பிஷ்’ என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ‘கைமேரா’ என்கிற படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய்.
இந்த படத்தில் பெங்களூருவைச் சேர்ந்த எல்என்டி.எத்திஷ் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர். கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார், விக்னேஷ்ராஜா இசை அமைத்துள்ளார்.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் படம் குறித்து இயக்குனர் மாணிக் ஜெய் பேசியதாவது: மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
மிருகங்களுக்குள்ளேயே வேறு மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டு அதன் குணாதிசயங்கள் எவ்விதம் மாறுபட்டு இருக்கின்றன என்பதை ஆய்வுகள் சொல்கின்றன. அதை மையப்படுத்தித் தான்
‘கைமேரா’ என டைட்டில் வைத்துள்ளோம். கைமேரா என்பது மராத்திய மொழி வார்த்தை. இதை மனோ ராஜ்ஜியம் (மரபணுக்கள் மாற்றம்) என சொல்லலாம்.
பெங்களூருவைச் சுற்றி நிகழும் கதைக்களம் என்பதால் கர்நாடகாவில் பெங்களூர், ஹம்பி, இங்கே ஓசூர், ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்ததால் படப்பிடிப்பு முடிந்த கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே அதிலிருந்து மீண்டார்.
இந்தப் படத்தை எந்த மொழியில் பார்த்தாலும் அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இது ரிலீஸாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் படத்தின் நாயகன் எத்திஷ் மேடையில் பேச முடியாமல் தயங்கி நின்றார். அவருக்கு தமிழில் பேச தயக்கம், ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் புரியுமா என்ற கவலை. கன்னடத்தில் பேசினால் பிரச்சினை வருமோ என்ற பயம். இதன் காரணமாக தடுமாறி நின்றார்.
ஆனால் விழாவுக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அவரை கன்னடத்தில் பேசச் சொல்லி தைரியமூட்டினர். பின்னர் அவர் கன்னடத்தில் பேசினார். அதனை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இதனை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரும், பேரரசும். ‘எங்களுக்கு எல்லா மொழியும் சொந்த மொழிதான். கன்னடத்தையும் நாங்கள் வரவேற்போம்’ என்றார்கள்.