பூகம்பம்: அண்ணன் தம்பி மோதல்

உருவகேலியால் பாதிக்கப்பட்டு, சிறுவயதிலேயே தந்தை மற்றும் தம்பியை பிரிந்து அமெரிக்காவில் உள்ள அநாதை இல்லத்தில் வளர்கிறார் இஷாக் உசைனி. தனது இந்த நிலைக்கு காரணம் அண்ணனும், தம்பியும்தான் என்று கருதும் அவர் தம்பியையும், தந்தையையும் பழிவாங்க தமிழ்நாட்டுக்கு வருகிறார். தன்னை சக்தியுள்ள மனிதனாக மாற்றிக் கொள்ள தனக்கிருக்கும் பண பலத்தால் அரசியலில் குதிக்கிறார். தம்பி தயவு இருந்தால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்கிற நிலை. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

அரசியல்வாதி, கல்லூரி மாணவர் என்று, மாறுபட்ட இரட்டை வேடங்களில் தோன்றும் இஷாக் உசைனி, இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். அரசியல்வாதியாக வில்லத்தனம் காட்டுவதும், தொழில் அதிபராக ஸ்டைல் காட்டுவதுமாய் கவர்கிறார். அவருக்கு வரும் காதலும், அதனுடன் வரும் ஊடலும் கலர்புல்.

சாத்தானை வழிபடும் வில்லன் மற்றும் தில்சானா, ஹேமா, ரிஷத், என்.எம்.இலியாஸ், மும்பை மல்ஹோரா ஆகியோர் நிறைவாக நடித்திருக்கிறார்கள். தயாள் ஓஷோ, தேவராஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு, சதாசிவ ஜெயராமனின் இசை படத்திற்கு உதவி இருக்கிறது.
நடிப்பு, இயக்கம் இரண்டிலும் பாஸாகிறார் இஷாக் உசைனி. தொழில்நுட்ப தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் தரமான ஆக்ஷன் படமாக அமைந்திருக்கும்.

Comments (0)
Add Comment