தமிழ் சினிமாவில் கடன் இல்லாத தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல் ராஜா

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது:சில படங்கள் சரியாகப் போகவில்லை, அதனால் நெகடிவிட்டி, நிறையக் செய்தி பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். ஆனால் இண்டஸ்ட்றியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான். நான் நன்றாகத் தான் இருக்கிறேன். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள்.  ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணாவுக்கு நன்றி. KVN அண்ணா, அவர்களின் ஜனநாயகன் படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது,  விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு  அவர் எனக்கு பெரிய துணையாக இருந்தார். அவருக்கு என் நன்றிகள்.  

பென் மூவிஸ் ஜெயந்திலால் காடா சாருக்கு நன்றி. சக்தி பிலிம்ஸ் சக்திவேலனுக்கு நன்றி. பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி.  TTT படம் வருகிறது கண்ணன் ரவி சார்  இப்படத்திற்கும் பெரிய உதவிகள் செய்தார் அவர் படமும் பெரிய வெற்றி பெறட்டும். இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான், தீயாகப் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

கார்த்தி பேசியதாவது: கடந்த வருடம், பெரிய  செலிப்ரேஷனோட இந்த படத்தை வெளியிட  நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அது தள்ளிப்போய்விட்டது. எனது முதல் படமும் இது போல  தள்ளிப்போனது. அடுத்த படம் தள்ளிப்போனது. அதனால தாமதம் என்கிறது எங்களுக்கு புதுசு இல்லை – பழகிவிட்டது. இந்த சூழ்நிலையில், நான் ஞானவேல்ராஜா சார்கிட்ட எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். “நீங்கள்  நான் என்ன நினைக்கிறேனென்று நினைக்கவே வேண்டாம். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். நாம் போராட்டத்தில் உடலைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

சின்ன வயதில் என் அப்பா ஒவ்வொரு அரிசியிலும் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ  அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அது போல் சினிமாவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். அவர் சொன்னது அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது

ஞானவேல்ராஜா சார் சொன்ன மாதிரியே,நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். முக்கியமாக சூர்யா  அண்ணா. அவரோட சப்போர்ட் இல்லாமல் இந்த படம் இப்படி ரிலீஸ்  ஆகி இருக்க முடியாது. அதே மாதிரி பைனான்ஸியர்ஸ், டிஸ்ட் ரிபியூட்டர்ஸ்,  எக்ஸிபிட்டர்ஸ், டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. 48 மணி நேரம், 50 மணி நேரம், தூங்காம வேலை செய்து, இந்த படத்தை நம்ம கைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். எல்லா தொழிலாளர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நலன் சார் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயக்குநர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஆர்டிஸ்ட்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த இயக்குநர்.  அவர் இந்த கான்செப்ட் கொண்டு வந்தப்போ, எனக்கு ரொம்ப பயமா இருந்தது. இந்த கேரக்டருக்கு ஒரு தனி டிரெய்னிங் வேண்டும். ஆனால் நான் டிரெய்னிங் எடுத்து வரவில்லை. On-set-ல கற்றுக்கொண்டேன், மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.ஒவ்வொரு நாளும், எம் ஜி ஆர் சாரோட படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து, அவரோட close-ups பார்த்து, “என்னோட முகத்துல அதை எப்படி கொண்டு வரலாம்?”ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். எனக்கு என்னோட முகத்தையே சரியா பார்க்க முடியாத பயம் இருந்தபோது, அவரோட முகத்தை screen-ல கொண்டு வரணும்னு நினைத்ததே ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் நலன் மாதிரி ஒரு இயக்குநர், ஜார்ஜ் மாதிரி ஒரு கேமராமேன், அந்த முழு குழுவின் சப்போர்ட் இருந்ததால “இத பண்ண முடியும்”ன்னு ஒரு நம்பிக்கை வந்தது. அது படத்தில் சாத்தியமாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை இந்த படத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது.

எம் ஜி ஆர் திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக செய்தது ரொம்ப பெரிய விஷயம். காலை அவர் சமாதிக்கு போய் கும்பிட்டு வந்தோம். அங்க நின்னப்போ உணர்வு வேற மாதிரி இருந்தது. நாற்பது வருஷமா அவர் இல்லை. ஆனா இன்னும் அவரை நினைக்கிறோம். இன்னும் அவரைப் பற்றி படம் எடுக்க ஆசைப்படுகிறோம். அங்கிருந்து திரும்பி வரும்போது, இந்த எல்லா விஷயங்களும் சரியாக அமைந்ததுக்கு அவரோட ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகளோடு, குடும்பமா, எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்ககூடிய ஒரு ஜாலியான படம் இது. இந்த பொங்கலுக்கு  ரிலீஸ்  ஆகுற, ரிலீஸ் ஆகப்போகுற எல்லா படங்களும் மக்களைச் சந்தோஷப்படுத்தி பெரிய வெற்றி பெறவேண்டுமென்று மனசார வாழ்த்துகிறேன்.

Comments (0)
Add Comment