பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.
இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை சிவகுமார் முருகேசன் சொல்லும்போது சிரித்து மகிழ்ந்தேன். ஆனாலும், தாய் கிழவி ஞாயிற்றுக்கிழமை ஆனால் மதுரைக்கு போய்வருவார். அதைப்பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். எனக்கும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அதற்கான பதில் தெரிந்ததும் படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்தப் படத்தை தயாரித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன்.
நான் ரசித்த எமோஷனலான விஷயங்களை ரசிகர்களும் கைத்தட்டி வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் இருந்த ரசிகன் சரியாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். இந்தப் படத்தை என் குழந்தை போலதான் பார்த்துக் கொண்டேன். சினிமாத்துறையில் தனக்கு இருந்த அனுபவம், வலி இவை எல்லாவற்றையும் சேர்த்துதான் இந்த கதாபாத்திரத்திற்கு ராதிகா மேம் உயிர் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ இல்லை என்ற உணர்வே எனக்கு வரவில்லை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
என் வாழ்க்கையில் நிறைய பேரை நியாபகப்படுத்துவதற்காக செய்யப்பட்ட படம்தான் இது. முதலில் என் அம்மா. அப்பா இறந்தபிறகு வீட்டில் காசு சேர்த்துவைத்து என்னையும் அக்காவையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்து ஆளாக்கினார். பிறகு என் அக்கா. ’படைக்க, காக்க, அழிக்க என ஆண்களை கடவுளாக காட்டியவன், படிப்புக்கும் பணத்துக்கும் பொம்பளையைதான் காட்டி கும்பிட சொன்னான்’ என படத்தில் ஒரு வசனம் வரும். அதை நான் முன்பே உணர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன்.
இதுநாள் வரை என் வரவு, செலவு அனைத்தையும் ஆர்த்தி தான் பார்த்துக் கொள்கிறார். அவர் இல்லை என்றால் புரொடக்ஷன் எல்லாம் நான் செய்திருக்க முடியாது. இவர்கள் எல்லாரும்தான் என் பவுனுத்தாயி. இதுபோல, உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பவுனுத்தாயிகளுக்கும்தான் இந்தப் படம்.
இந்தப் படத்தை மொத்தம் 12 முறை பார்த்திருக்கிறேன். என் படத்தைக் கூட அத்தனை முறை பார்த்ததில்லை. நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தின் ப்ரீமியர் முடிந்ததும் இயக்குநர் சிவகுமாரின் அப்பா வந்து எங்கள் இரண்டு பேரையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்த நொடியில் என் அப்பா இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இதெல்லாம்தான் எனக்கு நிறைவை கொடுக்கிறது. வெற்றி என்பது விளையாட்டில் கூட விளையாட்டாக வராது என்பதை இந்த படக்குழு மீண்டும் உணர்த்தியிருக்கிறது.
அடுத்து ‘சேயோன்’ படமும் சிவாவுடன் தான். ’தாய் கிழவி’ படத்தின் லாபம் நிச்சயம் தேவைப்படுபவர்களுக்கு உதவும். எஸ்.கே. புரொடக்ஷன்ஸின் பத்தாவது படத்தை புதுமுக இயக்குநர்தான் இயக்குகிறார். அவர் பெயர் அம்மாமுத்து சூர்யா. மற்றபடி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்றார்.