புதுமுகங்கள் உருவாக்கி இருக்கும் படம் ‘யாதும் அறியான்’. ‘தி ஓமன்’ மாதிரியான ஒரு ஹாலிவுட் படத்தை தர கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்பு நல்ல பலனையும் தந்திருக்கிறது.
கதையின் நாயகன் தினேஷ், அவரது காதலி பிராணா, நண்பன் ஆனந்த் பாண்டி, அவரது காதலி ஷியாமல் ஆகியோர் ஒரு ஜாலி டிரப்பாக ஒரு மலைப்பகுதியில் உள்ள ரிசார்ட்சில் தங்குகிறார்கள். அந்த ரிசார்ட்சின் மானேஜராக அப்புக்குட்டி இருக்கிறார்.
நாயகன் தினேஷ் இரு இரவில் நாயகி பிராணாவுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது பிராணா இறந்து விடுகிறார். அவர் சாவிற்கு நாம்தான் காரணமோ என மனரீதியாக பாதிக்கப்படும் தினேஷ் அதை மறைக்க அடுத்தடுத்து தனது நண்பன், அவனது காதலியையும் கொல்ல வேண்டியது வருகிறது. அவர்களை கொடூரமாக கொன்று வீசுகிறார். இந்த உண்மை மானேஜர் அப்புக்குட்டிக்கு தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
அறிமுக நாயகன் தினேஷ், புதுமுகம் என்று தெரியாத வகையில் பிரமாதமாக நடித்திருக்கிறார். காதலியிடம் காதலில் வழிவது, பின்பு கொடூரமான கொலைகாரனாக மாறி பயங்காட்டுவது என இரு முகம் காட்டி நடிக்கிறார். நண்பன் ஆனந்த பாண்டியும், அப்புக்குட்டியும் சிரிக்க வைக்கிறார்கள், நாயகிகள் வெறும் அழகை மட்டும் காட்டாமல் நடிக்கவும் செய்கிறார்கள்.
ஒரு ரிசார்ட், நான்கைந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டு மிரட்டலான படம் தந்திருக்கிறார் இயக்குனர் கோபி. திகில் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்.