பல வருட அனுபவம் இருந்தும் தேய்காய்முறி வக்கீலாகவே இருப்பவர் சரவணன், அறிவும், திறமையும் இருந்தும் தனது கூச்ச சுபாவத்தால் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருக்கிறார். அவரிடம் உதவியாளராக சேருகிறார் நாயகி நம்ரிதா. சரவணனிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வர விரும்பும் அவரை ஊக்கப்படுத்துகிறார்.
இதனால் கோர்ட் வாசலில் தன் மகள் சாவுக்கு நீதி கேட்டு தீக்குளித்த ஒருவரின் வழக்கை பொது நல வழக்காக எடுத்துக் கொண்டு வாதாடுகிறார். அந்த வழக்கின் பின்னால் ஒரு பெரிய சக்தி இருந்தும் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளை நிறுத்தி எப்படி நீதியை நிலை நாட்டுகிறார் என்பதுதான் தொடரின் கதை.
திடீரென ஒரு வழக்கில் குதிக்கும் சரவணனுக் அந்த பெண் 20 வருடங்களுக்கு முன்பே காணாமல் போனதும், தீக்குளித்து உயிரிழந்த அவரது தந்தை நீண்ட நாட்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வருகிறது. இந்த சவாலை எப்படி ஜெயிக்கிறார் என்பது திரைக்கதை.
வழக்கறிஞராக நடித்திருக்கும் சரவணன், மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். கருப்பு அங்கி போட்டு, நீதிமன்றத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும், அளவான நடிப்பு, இயல்பான உடல் மொழி மூலம் சுந்தரமூர்த்தி என்ற சாதாரண வழக்கறிஞர் வேடத்தை மிக கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அவரது கேரியரில் இது முக்கியமான இடம்.
சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் நம்ரிதா, தைரியம், துணிவு மிக்க பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். விரைவில் சினிமாவில் ஹீரோயினாக பார்க்கலாம்.
அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், இனியா ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். நீதிமன்ற வளாகம், நீதிமன்ற வழக்கு விசாரணை என முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் பயணிக்கும் கதையாக இருந்தாலும், அதை பல்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தி அனைத்து எப்பிசோட்களையும் சலிப்பின்றி நகர்த்திச் சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன். விபின் பாஸ்கரின் பின்னணி இசையும் இணைந்து கதை சொல்கிறது.
7 எபிசோட்களையும் திரைப்படத்திற்கு நிகராக படமாக்கி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் பாலாஜி செல்வராஜ். ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது.