கட்டா குஸ்தி 2: குதூகலிக்க வைக்கும் குடும்ப குஸ்தி

செல்ல அய்யாவு, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளிவந்த ‘கட்டா குஸ்தி’ பெரும் வெற்றி பெற்றது. ஆணாதிக்க மிகுந்த ஒருவனுக்கு அதிரடியான பெண் மனைவியானால் எப்படி இருக்கும் என்ற காண்ட்ராஸ்டான கண்டெண்டில் உருவான படம் அது. இப்போது அதன் தொடர்ச்சி.

விளையாட்டு கோட்டாவில் ரெயில்வேயில் நல்ல வேலையில் இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி, 5 வயது மகள் பள்ளிக்கு செல்கிறாள், நாயகன் விஷ்ணு விஷால் ஹோம் ஹஸ்பெண்டாக இருந்து அம்மா, மகளுக்கு உதவி செய்கிறார். மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கு வாழ்க்கையில் ஈகோ விளையாடுகிறது.

தன் மகள் தன்னை போலவே குஸ்தி ஜாம்பியனாக வேண்டும் என்று விரும்புகிறார் ஐஸ்வர்யா, அவள் விரும்பிய துறையை தேர்வு செய்யட்டும் என்கிறார் விஷ்ணு விஷால் இந்த சின்ன பொறி பெருந்தீயாக மாறி இருவரையும் பிரிக்கிறது. மனைவிக்கு நல்லது செய்வதாக நினைத்து ஒரு தவறை விஷ்ணு செய்துவிட அதனால் போட்டியில் தோற்று தன் கேரியரை இழக்கிறார் ஐஸ்வர்யா. இவர்கள் மோதல் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை செல்கிறது. பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு எப்படி ‘சுபம்’ போடப்படுகிறது என்பதுதான் கதை.

ஹோம் ஹஸ்பெண்டாக விஷ்ணு விஷால் பிரமாதப்படுத்துகிறார். வேலையை விட்டுவிட்டு நாமும் ஹோம் ஹஸ்பெண்டானால் என்ன என்று ஆண்களை சிந்திக்க வைத்திருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி குடும்ப பெண்ணாகவும், குஸ்தி பயில்வானாகவும் இருமுருகம் காட்டி தன் இருப்பை அழுத்தமாக பதிக்கிறார். சண்டை காட்சிகளில் அவரது உழைப்பு அபாரம். இவர்களின் மகளாக வரும் அந்த வாண்டு …. அப்படியொரு அழகு, அப்படியொரு நடிப்பு சின்ன வயது மீனாவை பார்த்தது போலவே இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக ஒரு ரவுண்டு வருவார்.

முனீஷ்காந்த், கருணாஸ், யோகிபாபு, காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணனின் திடீர் எண்ட்ரி அடிபொளி. பெண்கள் ஹவுஸ் வொய்பாக இருக்கும்போது ஆண்கள் ஏன் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்க கூடாது. கணவன், மனைவி சண்டைக்குள் மூன்றாவது மனிதர்கள் நுழையக்கூடாது என்ற மெசேஜையும் சொல்லியிருக்கிறார்கள்.
குடும்பத்தோடு சென்று இந்த குஸ்தியை குதூகலமாக பார்த்து மகிழலாம்.

Leave A Reply

Your email address will not be published.