ஜல்லிக்கட்டு பின்னணியில் ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இது வடஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகி உள்ளது. ஜல்லிகட்டில் காளையர்கள் மாடுகளுடன் யிறூசிஹிவார்கள். ஜல்லி விரட்டில் காளையை துரத்துவார்கள், வட ஜல்லிக்கட்டில் காளையை ஒரு நீண்ட வடத்தில் (கயிறு) கட்டிப்போட்டு விடுவார்கள். சுற்றி எல்லைகோடு போடப்படும் அந்த கோட்டுக்குள் சென்று காளையை அடக்க வேண்டும். இது கொஞ்சம் பாதுகாப்பான விளையாட்டு.
படத்தின் கதைப்படி நாயகன் வெற்றிவேல் (விமல்) பாண்டிமுனி என்கிற காளையை தம்பி போல வளர்க்கிறார். எட்டுப்பட்டியிலும் பாண்டி முனிக்கு வெற்றிதான். இது எதிர்தரப்பை சேர்ந்த ரத்னவேலுக்கு (நட்டி) பிடிக்கவில்லை. காரணம் பாண்டிமுனி ரத்னவேலு வேண்டாம் என்று அடிமாட்டுக்கு அனுப்பிய காளை. ரத்னவேல் பாண்டிமுனியை கைப்பற்ற நிறைய போராடுகிறார். இறுதியில் விபத்து ஏற்படுத்தி காளையை காயப்படுத்துகிறார். இது தொடர்பான மோதலில் ரத்னவேல் கொல்லப்பட வெற்றிவேல் சிறைக்கு செல்கிறார்.
ஜாமீனில் வெளியில் வரும் வெற்றிவேலை போட்டுத்தள்ள பல குரூப்புகள் கிளம்புகிறது. அதில் விமலுக்கு நெருக்கமான சிலரும் இருக்கிறார்கள். இறுதியில் சதிகளை வென்று வெற்றிவேல் வெற்றி பெற்றாரா? என்பதுதான் கதை.
பரபரப்பான ஒரு கிராமத்தை படத்தை ஆக்ஷன் மோடில் தந்திருக்கிறார் இயக்குனர் கேந்திரன். அவரது ஸ்பீடுக்கு பிரசன்ன குமாரின் கேமரா ஈடுகொடுத்திருக்கிறது. ஆக்ரோஷமான இசையால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் டி.இமான்.
விமலுக்கு இதுபோன்ற கதைகள் புதிதல்லை என்றாலும் ஆக்ஷனில் பொளந்து கட்டுகிறார். உங்க காளைய எனக்கு சீதனமா தர்றீங்களா? என்று காதலிலும் கசிந்துருகிறார். நாயகி சன்சிகா ஸ்ரீ தெனாவெட்டான கிராமத்து பெண்ணை கண் முன் நிறுத்துகிறார். அவரது இன்னொரு முகமும் மிரட்டுகிறது. முனிஷ்காந்த் அமைதியாக வந்து கடைசியில் ஆதகளம் பண்ணுகிறார். பால சரவணன் சிரிக்க வைக்கிறார்.
ஹீரோவின் தந்தை ஆடுகளம் நரேன், தாய் இந்துமதி, பாட்டி தீபா சங்கர், வில்லன் மதுசூதனன் ஆகியார் தங்கள் கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். வட ஜல்லிக்கட்டு போட்டிகளை, கோவில் திருவிழாக்களை நிஜமாகவே நடத்தி படமாக்கி இருக்கிறார்கள். அதனால் படம் பார்த்து வெளியில் வரும்போது சொந்த ஊருக்கு சென்று வந்த திருப்தி கிடைக்கிறது.
வடம், சூப்பரான படம்