சூர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் இதுவரை 150 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இதையொட்டி படத்தில் பணியாற்றிவர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியதாவது: தெலுங்குத் திரையுலகம் என் அம்மாவைப் போன்றது என்றால், தமிழ்த் திரையுலகம் என் பெரியம்மாவைப் போன்றது; இந்த இரு தாய்களின் ஆசியையும் என்னால் பெற முடிந்தது உங்கள் அனைவராலும் தான். ஒரு நல்ல இயக்குநராகவும், நல்ல பெயரைப் பெற்றவராகவும் மாற வேண்டும் என்ற முனைப்புடன் கடந்த பத்து ஆண்டுகளாக நான் உழைத்து வருகிறேன். அந்தப் பயணம் இப்போதும் தொடர்கிறது.
ஆனால், இந்தப் பயணத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதரவு உங்கள் அனைவரிடமிருந்தும் வந்ததுதான். அதை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
மக்களுக்கு நாம் புதிதாக எதையாவது வழங்க வேண்டும் என்பதை சூர்யா தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார். ஒரே மாதிரியான விஷயங்களையே அவர்களுக்குத் திரும்பத் திரும்ப வழங்கிக்கொண்டிருக்கக் கூடாது. ரசிகர்களுக்குப் புத்தம் புதிய ஒன்றை வழங்கும்போது, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, மதித்து, பாராட்டுவார்கள். அதை அவர் மிக நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார். அவரைப் போன்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய துணிச்சலான முடிவை எடுத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இப்போதும் கூட, இப்படம் 150 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்துவிட்டது மகிழ்ச்சியாக உள்ளது. என்றார்.