மதுரை மக்களுடன் வாழ்ந்து உருவாக்கிய தொடர் ‘வதந்தி -2’: தயாரிப்பாளர்கள் தகவல்

வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இணைய தொடர் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ . சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிமோன் இசை அமைத்துள்ளார். பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வெளியாகிறது.

தொடரின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி பேசியதாவது: இந்த இணைய தொடர் மிக சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப்பற்றி நாங்களே பெருமிதமாக பேசக்கூடாது. இயக்குநர் ஆண்ட்ரூஸ், ‘ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியை பற்றிய கதையை சொன்னவுடன் எங்களுக்கு பிடித்தது. அதிலும் அந்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன்.. அவருக்கு ஏற்றார் போல் கதையை எழுதியது போல் இருந்தது. மேலும் இந்த இணைய தொடரில் ஏராளமான புது இளம் திறமைசாலிகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் வீடியோவின் ஆதரவு எப்போதும் போல் மிகச் சிறப்பானதாக இருந்தது. இந்தத் தொடரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவரும்.

வதந்தி சீசன் 1 கதையை இயக்குநர் ஆண்ட்ரஸ் எழுதிக் கொண்டிருக்கும்போதே… சீசன் 2 விற்கான ஐடியாவை அவர் வைத்திருந்தார். இயக்குநர் ஆண்ட்ரூஸ் மதுரையை சேர்ந்தவர் அல்ல. இருந்தாலும் அந்த கதைக்களத்தை பற்றி நன்றாக நன்றாக தெரிந்து கொள்வதற்காக பல மாதங்கள் மதுரையில் தங்கி மக்களுடன் கலந்து வாழ்ந்தார். அவர்களுடைய நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்குப் பிறகு திரைக்கதையை இறுதி செய்தார். இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதை திரையில் அவர் சின்ன சின்ன விசயங்கள் மூலம் விவரித்திருக்கிறார். அப்போதுதான் பார்வையாளர்களால் மூஸா ராசா எனும் கதாபாத்திரத்துடன் எளிதாக பயணிக்க முடியும்.

மூஸா ராசா என்ற கதாபாத்திரத்தை எழுதி முடித்துவிட்டு, இதற்காக சசிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்னதும் எனக்கும் கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது. நாங்கள் இருவரும் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம் ‘ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வெகுவாக கொண்டாடினோம். அது முதல் சசிக்குமாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.

மதுரை பின்னணி – சசிகுமார் நடிக்கிறார் – ஆனால் ஒரு அருவாள் இல்லை…. கத்தியில்லை… ரத்தம் இல்லை… என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் சசிகுமாரிடம் நீங்கள் சில நிமிடங்கள் பேசினாலே… அவர் மூஸா ராசா என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பது தெரியவரும். அவ்வளவு அன்பானவர். அடக்கமானவர். அதிர்ந்தும் பேசாதவர்.

வதந்தி சீசன் 2 படத்தின் பணிகளை தொடங்கிய தருணத்திலிருந்து ஒவ்வொரு விசயமும் எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தது. கதையாகட்டும்… கதாபாத்திரங்கள் ஆகட்டும்… இசையாகட்டும்… ஒவ்வொரு விசயமும் எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

வதந்தி சீசன் 1 க்கு பிறகு ,சீசன் 2 விற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸ் திரைக்கதையை எழுத நிறைய நேரம் எடுத்துக்கொண்டார். சீசன் 2 விற்காக அவர் எழுதி நிறைவு செய்த மூன்றாவது கதை தான் இது. அதனால் தான் வதந்தி சீசன் 1 வெளியாகி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு சீசன் 2 வெளியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
========

Leave A Reply

Your email address will not be published.