சிறிது தாமத்திற்கு பிறகு வந்திருக்கிற படம்தான். ஆனால் அந்த காலும் அன்பும் இப்போதும் ஈரம் காயாமல் இருக்கிறது.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில் பயணத்தில் கலையரசன், காளி வெங்கட், ராகவ் விஜய் ஆகிய மூவரும் ரெயில் சிநேகிதர் ஆகிறார்கள். மூவருமே பயணத்தில் தங்கள் காதல் அனுபவங்களை பகிர்கிறார்கள். இந்த மூன்று பேரின் காதலுக்கும் தற்செயலான தொடர்பு ஒன்று உள்ளது. அது என்ன என்பதுதான் கதை.
கதையின் முடிவு வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இயக்குநர் ஜானகிராமன் அந்த முடிவை நோக்கி கதையை நகர்த்தி சென்ற திரைக்கதை நேர்த்தியாக அமைந்திருப்பதால் படம் சுவாரஸ்யம் கூட்டுகிறது. கலையரசன், காளி வெங்கட், ராகவ் விஜய், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சவேரி ஆகியோர் கேரக்டருக்கு ஏற்ப நடித்துள்ளனர்.
10ம் வகுப்பு மாணவனாக காளி வெங்கட் நடித்து அதிர்ச்சி தருகிறார். அவர் ஒருதலையாக காதிக்கும் ஆனந்தி அத்தனை அழகு. மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, காயத்ரி சங்கர், இயக்குனர் பாலாஜி மோகன், ரவிகுமார் ஆகியோரும் வந்து போகும் கேரக்டர்களாக இல்லாமல், தங்களுக்கான முத்திரையை பதிக்கிறார்கள்.
பாலுவின் ஒளிப்பதிவு கலர்புல் ரங்கோலி, நிவேஸ் கே.பிரசன்னாவின் இசை காதை குளிர வைக்கிறது. ‘திருமணத்துக்கு முன்பான காதலில் தோல்வி இருக்கலாம். திருமணத்துக்கு பிறகான காதல் எப்போதுமே தோற்காது’ என்பதுதான் படம் சொல்லும் மெசேஜ். காலம் கடந்து வந்தாலும் காதல் எப்போதுமே பிரஷ்காத்தான் இருக்கும். காதல் மட்டுமல்ல காதல் படமும்.