பனி விழும் இரவு: இசை அமைப்பாளர் தயாரிப்பாளரான கதை

பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர் சதா முருகன் பேசியதாவது:

‘பனிவிழும் இரவு’ என்பது மாறுபட்ட, கவித்துவமான தலைப்பு. நான் ஒரு பாடலாசிரியரும் கூட. சமீபகாலமாக வெளியாகும் பல தமிழ்ப் படங்களுக்குத் தமிழின் அழகையும் பெருமையையும் தாங்கும் தலைப்புகள் அமைவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால், அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம். ஆண்டுதோறும் 300கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் தமிழ் சினிமாவில், இதுவரை சொல்லப்படாத மாறுபட்ட கதைக்களத்தை இந்தப் படத்தின் மூலம் முன்வைத்திருக்கிறோம்.

கதாநாயகன் அருண் கார்த்தி பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருந்தாலும், திரையில் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கண்கலங்க வைத்துவிடுவார். கதாநாயகி எனாக்ஷி கங்குலி தமிழை அறியாதவராக இருந்தாலும், தனது நடிப்பால் படத்துக்கு மெருகூட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் இப்படத்தில் இணைந்த நான், கதைக்களம் பிடித்ததால் தயாரிப்பிலும் ஈடுபட்டேன். மற்றொரு தயாரிப்பாளர் ஜெயக்குமார் தங்கவேல் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்தப் படத்தை வித்தியாசமான படைப்பாக உருவாக்கியிருக்கிறோம்.

‘பனிவிழும் இரவு’ திரைப்படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமானது. படத்தின் ஆறாவது ரீல் தொடங்கும் வரையிலும் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்களால் கணிக்க முடியாது. அப்படியொரு சுவாரசியமான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது குறைந்தது நூறு குடும்பங்களாவது அதன் மூலம் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் பெறுகிறார்கள். எனவே, எங்களைப் போன்ற சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் படைப்புகள் தரமாக இருக்கும்போது, எங்களை ஊக்கப்படுத்த வேண்டும். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.