ஹைகூ: காதல் இருபுறமும் கூர்மையான கத்தி

காதல் பற்றி ஏராளமான படங்கள் பார்த்தாகிவிட்டது, என்றாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வந்திருக்கும் படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் முன்வைக்கும் படைப்பாக உருவாகியிருக்கிறது. கல்லூரி வாழ்க்கை, காதல், பிரேக்கப், இரண்டாவது காதல் என இளைஞர்களுக்கு நெருக்கமான விஷயங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

கல்லூரியில் செய்த சேட்டையினால் நாயகன் மனோகரை (ஏகன்) அங்கிருந்து டிஸ்மிஸ் செய்துவிடுகிறார்கள். இறுதியாண்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டதால், அவருக்கு வேறொரு கல்லூரியில் சீட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இறுதியில், பெண்கள் மட்டுமே படிக்கும் ஒரு கல்லூரியை இருபாலருக்குமானதாக மாற்றிய பிறகு அங்கு முதல் மாணவனாகப் போய்ச் சேர்கிறார் மனோ. அங்கு பவளக்கொடிக்கும் (ஸ்ரீதேவி அபல்லா) மனோவுக்கும் காதல் உருவாகிறது.

சென்னையில் ஆட்டோமொபைல் வரைகலை நிறுவனம் ஒன்றில் பணியிலிருக்கும்போது அங்கே பயிற்சிக்காக இணையும் நிவேதாவுடன் (பெனிமா ஜார்ஜ்) நட்பு ஏற்படுகிறது. இருவருக்கும் காதல் உருவாகிறது. இந்த இரண்டு முரண்பட்ட காதல்களில் எது சக்சஸ் ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.

மனோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஏகனுக்கு இந்தப் படம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மாணவிகள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவராக அவர் சேரும் அறிமுகக் காட்சியே கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. சுற்றிலும் மாணவிகள் இருக்க, ஆரம்பத்தில் அந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் தவிக்கும் ஏகன், பின்னர் அவர்களுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன.கல்லூரியில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, காதலில் விழுந்ததும் முகத்தில் தெரியும் உற்சாகம், காதலியிடம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவது என முதல் பாதியில் ஜாலியான இளைஞராக வலம் வருகிறார்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகியுள்ள ஸ்ரீதேவி அப்பல்லா, கல்லூரி மாணவி கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இரு’கிறார். கதாநாயகிகள் ஸ்ரீதேவி அபல்லா, ஃபெமினா ஜார்ஜ் இருவரும் நல்ல ரேங்க் வாங்குகிறார்கள். இரண்டு நாயகிகளின் கதாபாத்திரங்களும், தங்களது நடிப்பால் அவற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அதிர்ச்சி அருண், சுப்ரமணியன் சேது, ஸ்ரீதேஜ் எஸ்கே உள்ளிட்ட நடிகர்கள் கதையின் நகர்வுக்குத் தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். பிரிகிடா ஒரு பாடல் காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார்.

இசையமைப்பாளர் சித்து குமார் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். ‘கருவிழி’ பாடல் மென்மையான இசையாலும் அழகான காட்சியமைப்பாலும் மனதில் நிற்கிறது. ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் கேமரா பணியும் படத்திற்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளது. ஹைகூ இளைஞர்களை மட்டுமல்ல எல்லோரையும் தங்களின் காதல் காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.

Leave A Reply

Your email address will not be published.