1995ம் ஆண்டு வேலூர் கோட்டையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டு இருந்த 43 இலங்கை தமிழ் அகதிகள் சுரங்கப்பாதை அமைத்து தப்பி சென்றார்கள். இவர்களில் 21 பேர் மீண்டும் கைது செய்யப்பட மற்றவர்கள் கடல் வழியா தப்பிச் சென்று வெவ்வேறு நாடுகளில் அகதிகளாக குடியேறினர் என்பது வரலாறு.
இதனை மையமாக வைத்து அதனுடன் கொஞ்சம் கற்பனை கலந்து ராம்சிவா உருவாக்கி இருக்கும் படம்தான் இது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் தேவை சுதந்திரம் என்கிற உண்மையை கொண்டு இந்த கதை கோட்டையை கட்டி இருக்கிறார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தில் வேதனையோடு மக்களை சிரிக்க வைத்த சசிகுமார் இந்த படத்திலும் இலங்கை அகதியாக நடித்திருந்தாலும் இதில் வலியையும், வேதனைனையும் யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது மனைவியாக வரும் லிஜோ மோல் ஜோஸ் ஜெய்பீம் போன்றே இதிலும் கர்ப்பிணியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
அகதிகளுக்காக வாதாடும் வழக்கறிஞராக மாளவிகா அவிநாஷ், பார்வற்றை மணிகண்டன், முதியவர் மு.ராமசாமி, ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சுதேவ் நாயர் மிரட்டல் ரகம்.
அகதிகள் முகாமில் இலங்கை தமிழர் படும் துன்பங்கள். விசாரணை என்ற பெயரில் கொடும் சித்ரவதைக்கு ஆளாகும் ஆண்கள் என மனதை நெகிழ வைக்கும் காட்சிகளால் படம் கண்ணீரை வரவழைக்கிறது. கோட்டைக்குள் சுரங்கம் தோண்டி தப்பிக்கும் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரானின் பின்னணி இசை துயரத்தையும், யதார்த்தத்தையும் கூட்டுகிறது. உதயகுமாரின் ஒளிப்பதிவு கதை நடந்த காலத்தை கண்முன் நிறுத்துகிறது.
ஒவ்வொரு தமிழர்களும் காண வேண்டிய வரலாற்று பதிவு.