நடிகராக சென்னை வந்து தயாரிப்பாளரான அரசகுமார்

பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி.டி.அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம்‘கயிலன்’ . ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள். வரும் 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை முன்னிட்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அரசகுமார் பேசுகையில், ”இங்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு முதலில் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் கே. ராஜன் இங்கு வந்தவுடன் ‘கயிலன்’ படத்தின் கதை என்ன? கிரைம் ஸ்டோரியா? ஃபேமிலி ஸ்டோரியா? எனக் கேட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித் துளிகள் அங்கு சென்றேன்.

இந்த படத்தை பற்றி நான் சிந்திப்பதைவிட அன்புத்தம்பி அருள் அஜித் சிறப்பாக சிந்தித்திருக்கிறார். மிக சிறந்த திரை காவியமாக கொண்டு வர வேண்டும் என அவர் கடினமாக உழைத்து இருக்கிறார். ‌ அதை நான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். உங்களுடன் இணைந்துதான் நானும் இந்த படத்தின் முன்னோட்டத்தை இங்கு பார்த்தேன்.
இந்தப் படத்தின் நாயகி ஷிவதா தங்கமான சகோதரி. ஒவ்வொரு முறையும் பணிவாக நடக்கும் அவருடைய நடவடிக்கைகள் போன்று சினிமாவில் காண்பது அரிது. அவர் இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

நாடக குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவன் நான். எனது தாய் மாமன் வி.கே.சக்திவேல் மணப்பாறையில் மிகப் பெரிய நடிகர். கலைஞானத்தின் தம்பி போல் பணியாற்றியவர். ‘பெரிய மருது ‘, ‘மிருதங்க சக்கரவர்த்தி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். எனது தாத்தாவும் நாடக நடிகர்தான். அந்த வகையில் என்னுடைய ரத்தத்திலும் கலை உணர்வு ஊறி இருக்கிறது. என்றாவது ஒரு நாள் திரைத்துறையில் சாதிக்கலாம் என காத்திருந்தேன்.

1988-89 ஆண்டுகளில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகை தந்த என்னை இயக்குநர் டி. ராஜேந்தர் தான் திசை திருப்பினார். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். ஆனால் இந்த ஆசையை அப்போது கே.பாக்யராஜிடம் தெரிவித்திருந்தால் நடிகராகி இருப்பேன்.
1989-ம் ஆண்டிலிருந்து தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறேன். ஆனால் தற்போதுதான் முதல் முறையாக ‘கயிலன்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.