1991ம் ஆண்டில் வெளியான படம் கேப்டன் பிரபாகரன். ஆர்.கே.செல்வமணி இயக்கினார். இப்படத்துக்கு பிறகே விஜயகாந்துக்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது. விஜயகாந்தின் 100வது படம்.
முக்கிய வேடங்களில் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி நடித்திருந்தனர். வரும் ஆகஸ்ட் 25ம் தேதி, மறைந்த விஜயகாந்தின் பிறந்தநாள். இதை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ படம் மீண்டும் திரைக்கு கொண்டு வரப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள இப்படம், ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி கார்த்திக் வெங்கடேசன் மூலம் வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று கமலா தியேட்டரில் நடந்தது. இதில் படத்தை இயக்கிய ஆர்.கே.செல்மணி, வசனம் எழுதிய லியாகத்தலிகான், நடித்த மன்சூரலிகான், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஏ.ஆர்.முருகதாஸ், பேரரசு, ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், எழில், லிங்குசாமி, சிங்கம்புலி விஜய்காந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு மறு வெளியீட்டு படத்திற்கு இவ்வளவு பெரிய அளவில் விழா நடந்தது இதுவே முதல் முறை. விழாவில் ஆர்.கே.செல்வமணி இது விஜயகாந்தின் 100வது படம் என்பதால் முழு உழைப்பையும் இதில் செலுத்தினார். படத்தின் தலைப்பே அவரது பெயரானது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பிறந்த மகனுக்கு பிரபாகரன் என்றே பெயர் வைத்தார்.
நிறைய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்யுமாறு என்னை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அது இப்போது நடந்திருக்கிறது. இனி படத்தை பற்றி நான் அதிகம் பேச வேண்டியதில்லை 34 வருடத்திற்கு பிறகும் படம் நின்று பேசும். என்றார்.