‘அக்யூஸ்ட்’ வெற்றி: இனி இடைவெளி இல்லாமல் படங்களில் நடிப்பேன் என்கிறார் உதயா-

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில் உருவான படம் அக்யூஸ்ட். பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கி இருந்தார். ஆகஸ்ட் 1 அன்று வெளியான இந்த படம் நல்ல வரவேற்புடன் 3வது வாரமா ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்குநன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான ஏ. எல். உதயா பேசியதாவது: என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது.

இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.
சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்து வருகிறோம்.

எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும் தான் காரணம்.

இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான். அதனால்தான் இதற்கு காரணமான ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம்.

இப்படம் வெளியான பிறகு நாங்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என்று செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு கொண்டாடுகிறார்கள். எங்கள் மீது பேரன்பு காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம் தான்.
இந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்த குறையையும் சொல்ல இயலாது. திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி திரையரங்க உரிமையாளர்கள் தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம் தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தான் சுயநலம் அதிகம் இருக்கிறது.

இந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் சௌந்தர், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் டேனி, பிரபாகர், ஸ்ரீதர், ஹைடு கார்த்திக், நடிகைகள் சுபத்ரா, தீபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வி எஃப் எக்ஸ் மூர்த்தி என அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை, அஜ்மலும் ஒரு ஹீரோ தான். ஜான்விகா, யோகி பாபு ஆகியோருக்கும் நன்றி. இந்த டீம் மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் ‘டண்டனக்கா டான்’ என்ற பெயரில் கதையை சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த ‘அக்யூஸ்ட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்குவேன் என உறுதியாக சொல்கிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.