விஷ்ணு விஷால் கடின உழைப்பாளி: அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டு

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த படம், ‘கட்டா குஸ்தி-2’. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த இப்படத்தைச் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார்.ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாஸ், கருணாகரன், மோக் ஷா ஆகியோர் நடித்துள்ள இப்படம் 50 நாட்களைக் கடந்த நிலையில், இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நினைவு கேடயம் வழங்கினார்.
பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, “கட்டா குஸ்தி -2 படம் 50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் சாதனை. இன்றைக்கு 5 நாட்கள், ஏன் ஒரு நாளில் 5 காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த மணிமகுடம்.

இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளிகள் தேவை. தனது நடிப்புக்கு இணையாக சக நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவரது மனதைப் பாராட்டுகிறேன். படக்குழுவினர் அனைவரையும் கவுரவிக்க வேண்டும் என்று நினைத்து இந்த விழாவை நடத்தும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு என் வாழ்த்துகள்.

சட்டப்பேரவையிலும் கட்டா குஸ்தி தான் நடக்கிறது. அது மக்களுக்கு யார் நல்லது செய்வது என்ற ஆரோக்கியமான சண்டைதான். பேரவை முடிந்ததும் கைகுலுக்கிவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவோம். நம் முதல்வர் விஜய் ஆட்சியில் திரைத்துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.