ஐஎம் கேம்: துல்கரின் மாஸ் கேம்

ஒரு கை நமது மூளையின் உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படி இருக்கும் என்கிற பேண்டஸி ஒன்லைன்தான் படம். ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் வெளிவந்த படம் , பான் இந்தியா சினிமாவில் பயணித்த துல்கர் சல்மான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவுக்குத் திரும்பியுள்ள படம் தான் ‘ஐம் கேம்’.

கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்து, சூதாட்டத்துக்கு அடிமையாகி, கடனில் மூழ்கிக் கிடக்கும் டேன் (துல்கர் சல்மான்) கார் விபத்தில் சிக்கி வலது கையை இழக்கிறார். மறுபுறம், நேர்மையான கிரிக்கெட் வீரர் விக்கி (ஆண்டனி வர்கீஸ்). திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு கார்விபத்தில் சிக்கி இறந்து போகிறார்-. இவரது கை, துல்கர் சல்மானுக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. ஆனால் வி’கியின் கை துல்கரின் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு தனது சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

தனது கை, தன் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும்போது துல்கர் சந்திக்கும் அவஸ்தைகள் தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யம். இடைவேளை வரை துல்கரின் காமெடியே படத்தை தாங்கிப் பிடிக்கிறது. அதன் பிறகு அதகள ஆக்ஷன் தளத்திலும் பயணிக்கிறது. துல்கர் சல்மானுக்கு நடிகராக இது மேலும் ஒரு வெற்றி. ஒற்றை ஆளாக படத்தை மொத்தமாக சுமந்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரராக வரும் ஆண்டனி வர்க்கீஸ், வில்லனாக வரும் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா, கதிர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். ஜிம்ஷி காலித்தின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் கதைக்கு தேவையானதை கொடுத்திருக்கிறது.

ஒரு சுவாரஸ்யமான ஃபேன்டஸி கதைக்கருவை கையில் எடுத்துக் கொண்டு அதில் சில பல மேஜிக் செய்து மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படமாக தந்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.