அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான ‘ஹாய்’ படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்..
முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக வெளிவந்த இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘ஹாய்’ திரைப்படம், தற்போது ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் தயாரிப்பாளர் லலித்குமார் பேசியதாவது: இந்தப் படத்தை உருவாக்கியபோது, பெரிய படங்களுக்குப் பிறகு ஏன் இப்படிப்பட்ட படத்தைத் தயாரிக்கிறீர்கள் என்று பலர் கேட்டார்கள். நல்ல கதையையும், நல்ல படத்தையும் ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தோம். இன்று அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த மேடையில் இருக்கும் அனைவருடனும் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு உள்ளது. குறிப்பாக பிரபு சார் படப்பிடிப்பின்போது காட்டிய அன்பை மறக்க முடியாது. தூத்துக்குடி படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே என்னைத் தொடர்புகொண்டு, ‘தம்பி, நீ எதுவும் சாப்பிடாதே, வீட்டில் இருந்து உணவு கொண்டு வருகிறேன், என்னிடம்தான் சாப்பிட வேண்டும்’ என்று அன்புடன் கூறினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காட்டிய அந்த பாசத்திற்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடன் நிறைய விஷயங்களில் சண்டை போட்டிருக்கிறேன், அதே நேரத்தில் அந்த உறவில் இருக்கும் அன்புதான் மிகப்பெரியது.
விஷ்ணு கதை சொல்லும் விதமே மிகவும் தனித்துவமானது. அவர் கதையை விவரிக்கும்போதே அந்தக் கதையின் உணர்வை நம்மால் முழுமையாக உணர முடியும். அவர் முதலில் கதை சொல்லியபோதே அந்த எமோஷன் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று அந்தக் கதையை ஒரு நல்ல படமாக உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவுக்கும், இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. என்றார்.