பா. ரஞ்சித், வெற்றிமாறன் படங்களை விட சிறந்தது ‘நூறு சாமி’ : ஏ.ஆர். முருகதாஸ் பாராட்டு

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஏ. ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், சதீஷ் குமார், மதன், மந்திர மூர்த்தி, வி.இசட். துரை, சுப்பிரமணிய சிவா, நித்திலன் சாமிநாதன், ராஜூ முருகன், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர்கள் எஸ். எஸ். குமரன், சிமோன், சித்து குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியதாவது : இந்தப் படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி.  இது போன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியை பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ..! என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தை  சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.

விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் போது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.

இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ..! அதேபோன்று இந்த படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.

பாடலில் சின்ன சின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார். வலி- அவமானம்- என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனக்கு முன்னால் சசி இயக்குநராகிவிட்டார். ஒரு சமயம் அவரிடம் நான் இயக்குநராவதற்காக வாய்ப்பை தேடுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் , ‘எந்த சூழலிலும் பசியுடன் இருக்காதே. ஏதேனும் நெருக்கடி என்றால்.. என்னை சந்திக்கவும்’ என்று நம்பிக்கை அளித்தார். அப்போது என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது. நாம் உதவி கேட்கிறோமோ… இல்லையோ… நான் உதவ தயார் என்று ஒருவர் சொல்லும் போது மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாகும்.  நாம் கூப்பிட்டால் கடவுள் வந்துவிடுவார் என்றால்… நாம் கடவுளை கூப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நான் கூப்பிட்டால் கடவுள் வருவார் என்ற மன மகிழ்ச்சி இருக்கிறதல்லவா..! நம் முதல்வரின் போன் எண் நம்மிடம் இருக்கிறது என்றால் ..ஒரு  தைரியம் வரும் அல்லவா.. அவருடன் நான் தொடர்பு கொள்கிறோமோ… இல்லையோ… நம்மிடம் அவருடைய தொடர்பு எண் இருக்கிறது. ..என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா.. !அதுபோன்ற சந்தோஷத்தை எனக்கு கொடுத்தவர் சசி.

என்னுடைய முதல் திரைப்படமான தீனா திரைப்படத்தை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு கைவிட்டு விடலாமா..! என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒரு விழாவில் இயக்குநர் சசியை சந்தித்தேன். இயக்குநராகி விட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவரிடம் ‘இந்தப் படத்தின் பணிகள் இனி நடைபெறாது’ என்று அப்போது நடைபெற்ற விசயங்களையும்.. என் மனதில் உள்ள குழப்பத்தையும்.. அவரிடம் சொன்னேன். ‘படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்.. அதுவே தோல்விக்கான அர்த்தம். போராடு. நீ நினைத்ததை நூறு சதவீதம் திரையில் வந்து விட வேண்டும் என்று நினைக்காதே. எழுபது சதவீதம் வந்தால் போதும். மற்றவற்றை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அதன் பிறகு தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சமூக நீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. நம் வீட்டிலேயே ஆண் -பெண் என்ற வித்தியாசம்  இருக்கிறது. ஒரு ஆணுக்கு எளிதாக கிடைக்கும் பல விசயங்கள்.. பெண்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இந்த விசயத்தை சசி அற்புதமாக சொல்லி இருக்கிறார். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ரசிகர்களாகிய உங்களுக்கும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாகி பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

.

Leave A Reply

Your email address will not be published.