சிக்னல் அட் 11.30: யூகிக்க முடியாத கிளைமாச்சுடன் உருவாகி உள்ள படம்

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்ரமணி தயாரிக்கும் படம் ‘சிக்னல் அட் 11.30’. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மலர்விழி நடேசன் இயக்கி உள்ளார்.

படம் குறித்து அவர் கூறியதாவது: இந்த தலைப்பு கதையின் கருவோடு நேரடியாக இணைந்துள்ளது. இந்தக் கதையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட நோக்கம் இருக்கிறது. காதல், சஸ்பென்ஸ், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு ரொமான்டிக் த்ரில்லர்.

ஒரு நாள் காரில் செல்லும்போது இரவு 11,30 மணிக்கு சோழிங்நல்லூர் சிக்னலில் சரியாக 11,30 மணிக்கு நின்றது. அங்கு மினசார விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. சுற்றிலும் உள்ள உயரமாக கட்டிங்கள் இன்னும் தூங்காமல் இருந்தது. அங்கு நிலவிய அமைதி மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. அந்த பயத்திற்கான காரணத்தை தேடியபோது உருவான கதைதான் இது. அதே சிக்னலில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். பல முறை படப்பிடிப்பு தடைபட்டு ஒருவழியாக படத்தை முடித்தோம்.

திரைக்கதை எழுதும்போதே கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்குத் தேவையான உணர்வுப்பூர்வமான ஆழமும், திரை ஆளுமையும் குறித்து எனக்கு தெளிவான பார்வை இருந்தது. அந்த இரண்டையும் இயல்பாக வெளிப்படுத்தக்கூடிய நடிகர்களில் சந்தோஷ் பிரதாப்பும் ஒருவர். அவரது அர்ப்பணிப்பும், நேர்மையான உழைப்பும் அந்தக் கதாபாத்திரத்தை மேலும் செழுமையாக்கியது. பவ்யா திரிகா மற்றும் பூஜிதா பொன்னாடாவும் அர்ப்பணிப்புடன் திறமையாக நடித்துள்ளனர்.

ஆர்வத்தைத் தூண்டும் கதைக்களம், உணர்வுப்பூர்வமான திரைக்கதை மற்றும் இறுதிவரை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் நிறைந்த திருப்பங்களுடன், புத்துணர்ச்சியூட்டும் திரையரங்க அனுபவத்தை இந்த படம் தரும். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.