இனி தமிழ் படங்களில் அதிகம் நடிப்பேன்: ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா பேச்சு

நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “எங்கள் தங்கம்”.. இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது எழில் கலந்து கொண்டு சமந்தா பேசியதாவது :

சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான். சத்யம் திரையரங்கம் அமைந்துள்ள இந்த பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி காலத்தில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன். இன்று இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

பல வருடங்களாக அதிக தமிழ் படங்கள் செய்யவில்லை, அதிக வெளியீடுகளும் இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.