‘ஹார்ட்டின்’ காதல் படங்களில் தனித்து நிற்கும்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஹார்ட்டின்’. இதில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். வருகிற 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நடந்தது.

விழாவில் இயக்குநர் கிஷோர் குமார் பேசியதாவது: இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்திருக்கிறோம். அதனை இரண்டு மணி நேரத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம். என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய முதல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அஜித் கோஷி, வர்கீஸ் மேத்யூ போன்றவர்களை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் நடிகை இமயாவின் பங்களிப்பு அதிகம். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம். ‘காதலும் கடந்து போகும்’ படத்தை பார்த்தவுடன் மடோனா செபஸ்டியனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தின் கதையை அவர்களிடம் ஒரு நாற்பது நிமிடம் விவரித்தேன். அவர்களுக்கு நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலக பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவிற்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு ரெண்டு வெவ்வேறு வடிவங்கள் இருக்கிறது. இதனை அவருடைய அற்புதமான நடிப்பு திறனால் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார்.‌

இன்றைய சூழலில் காதலில் சுச்சுவேஷன்சிப், வெக்கேஷன்ஷிப் என எத்தனையோ ‘டேர்ம்ஸ்’ வருகிறது. ஆனால் லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அந்த எமோஷன் எப்போதும் எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து இருக்கும். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.