எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டார்’.
‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் அறிமுகவிழா நடந்தது. இதில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், டி. சிவா , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு பேசியதாவது: 13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக படிக்க வேண்டும் என்றார்கள், படித்தேன். உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள், பணியாற்றினேன். நிறைய இடங்களுக்குச் சென்று நிறைய பேரை சந்திக்க வேண்டும் என்றார்கள், சந்தித்தேன். அதன் பிறகு குறும்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள், குறும்படத்தை இயக்கினேன். மியூசிக் வீடியோ செய்ய வேண்டும் என்றார்கள், அதையும் செய்தேன். எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.
கோவிட் காலகட்டத்தில் அனைவரும் முடங்கி விடுகிறோம். கோவிட் முடிந்த பிறகு நமக்கு சினிமா வராது என்று நினைத்து, பத்து வருடமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ என நினைத்தேன். அதனால் இதனை விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்று விட்டேன். அந்த தருணத்தில் ஒரு போன் வருகிறது. டாடா படத்தின் கதையை சொல்கிறேன். அந்த கதையை சொல்லி முடித்தவுடன் ஒரே நாளில் அதனை படமாக உருவாக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.
தயாரிப்பாளரும் இந்தப் படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்கிறார். தயாரிப்பாளராக மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் நானும் அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது. பட்ஜெட்டில் எங்கெல்லாம் தயாரிப்பாளருக்கு செலவை குறைக்க முடியும் என்பதை பார்த்து பார்த்து செய்தேன்.
கல்யாண் என்னுடைய நண்பர். நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம். என்னுடன் இணைந்து பயணித்தான். எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது. அவன் நல்ல வேலையை பார்த்துக் கொண்டு, நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனது வேலையை நான் தான் கெடுத்தேன்.
அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவனுடைய ஆபீஸில் ஒரு பக்கத்தை ஒதுக்கி கொடுத்தான். நாளடைவில் அது என்னுடைய ஆபீஸ் ஆக மாறிவிட்டது. சிறிது நாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டான். இது பற்றி கேட்டபோது நீ முதலில் இயக்குநர் ஆகு. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். கல்யாணின் மனைவியிடம், ‘இவன் ஒரு நாள் நிச்சயம் பெரிய ஆளாகி விடுவான்’ என்று சொன்னேன். இன்று அது நடந்து விட்டது.
டாடா படத்தின் ரஃப் கட் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது செந்தில் சார் வந்தார். அந்தத் தருணத்தில் அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது. அவரை தயாரிப்பாளர் அழைத்து வந்தார். நான் சினிமாவை பற்றி படித்திருக்கிறேன் ஆனால் ஒரு சினிமாவுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாது. செந்தில் சார் வந்து படத்தை பார்த்துவிட்டு சென்ற அடுத்த நாள்… என் வாழ்க்கை மாறிவிட்டது. அது என்ன மேஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இவர் வந்து சென்ற அடுத்த நாள் என்னிடம் எல்லோரும் வேறு மாதிரியாக நடந்து கொள்ள தொடங்கி விட்டனர். முதன்முதலாக டாடா படத்தை அங்கீகரித்தவர் செந்தில் சார் தான். இந்த செந்தில் சார் இருக்கும் தைரியத்தில் தான் நான் தொடர்ந்து படங்களை தயாரிக்கிறேன். அவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன். நான் இன்று இவர்களுக்காக ‘டார்க்’ படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக ‘டாடா’வில் பணியாற்றினார்கள். அதனால் தான் ‘டார்க்’ என்பது ‘டாடா’ படத்திற்கான தேங்க்ஸ் தான்.
இந்தப் படத்தின் கதையை நான் தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன். ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன் வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன் அஜய் ஓகேவா என்று. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைய காட்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பேன்.
ஒரு நாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு என்றார்கள். நான் கிளைமாக்ஸை படமாக்குவதை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன்.
மிகவும் அமைதியாக இருக்கிறது. அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜய் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைத்துவிட்டது. கல்யாணும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அஜய் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து ஒன் மோர் இன்னொரு டேக் போகலாமா என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. அஜயிடம் நேரம் ஆகிறது. இயக்குநர் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. போதும் என்றேன். இறுதியில் இயக்குநரை சமாதானப்படுத்தி அதே காட்சியை மீண்டும் ஒரு முறை நடிப்பதற்காக அவர் செல்கிறார்.
நான் அப்போது கோபத்துடன் தனியாக சென்று அமர்கிறேன். அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து முடித்துவிட்டு இயக்குநர் ‘கட் ‘சொன்னவுடன் என் முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது அந்த ஷாட் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய படப்பிடிப்பில் நடிகர்கள் யாராவது நம்பிக்கையுடன் இன்னொரு டேக் கேட்டால் நான் அதை அனுமதிக்கிறேன். இந்த விஷயத்தை நான் அஜயிடம் கற்றுக் கொண்டேன்.
இந்தப் படமே அஜய் தான். அவர் கேரக்டர் மேல் ட்ராவல் ஆகும் கதை இது. இந்தப் படம் அஜயின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த மாதம் ‘டார்க்’ வெளியாகிறது. அடுத்த மாதம் ‘கராத்தே பாபு’ வெளியாகிறது. அதற்குப் பிறகு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ஆதரவு தாருங்கள். என்றார்.