50 லட்சம் துப்பாக்கிகளை தமிழகத்திற்கு திருட்டுத்தனமாக கொண்டு வந்து, மக்களிடையேக் கலவரத்தை தூண்டி, அவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்து ஒரு பெரிய சமூக பேரழிவை உண்டாக்கி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த திட்டமிடும் வில்லன பாபி தியோலின் திட்டத்தை மக்களுக்காக உண்மையில் போராடும் ஜனநாயகன் விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இடையில் அப்பா&மகள் சென்டிமெண்டும் உண்டு.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்) 30 பேரை கொலை செய்த குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார். அங்கு தளபதிக்கு உதவி செய்யும் காவல் அதிகாரி கெளதம் மேனன் விபத்தில் இறந்து விட அவருடைய மகள் மமிதா பைஜூவை தன் மகளாக வளர்க்கிறார் தளபதி.
மகளை ராணுவ அதிகாரியாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய தந்தை கவுதம் மேனின் கனவு. ஆனால், சிறு வயதில் ஏற்பட்ட சம்பவத்தால் அவருக்கு ‘பியர்ஃபோபியா’ என்கிற பயம் உண்டாகும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பயத்திற்குக் காரணம் என்ன, அதற்கும் தளபதிக்கும் என்ன சம்பந்தம், தளபதி யாரைக் கொலை செய்ததற்காக ஜெயிலுக்குப் போனார், அவர் யார் என்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது படம்.
தன்னுடைய அத்தனை ஸ்டைலையும் அள்ளித் தெளித்திருக்கிறார் விஜய். அலட்டல் உடல்மொழி, முறுக்கிவிட்ட மீசையுடன் சண்டைக் களத்தில் ஆடும் ஆக்ஷன், அதற்கு இடையிடையே எமோஷன் எனப் படம் முழுக்க விஜய் கச்சேரி களைகட்டுகிறது.
மகளாக மமிதா பைஜூ எமோஷன், ஆக்ஷன், தந்தையிடம் செல்லம் கொஞ்சல்கள் என அழுத்தமான கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். பாபி தியோலுக்கு படு பயங்கரமான வில்லன் கதாபாத்திரம், வெளுத்து வாங்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே காதலையும், கவர்ச்சியையும் சேர்த்தே தருகிறார். பிரகாஷ் ராஜ், அரசியல்வாதி கேரக்டருக்கு பொருந்திப்போகிறார். இவர்களைத் தாண்டி, ரேச்சல் ரெபேக்கா, முத்துக்குமார், பிரியாமணி, நரேன், மோனிஷா பிளசி, டீஜே எனப் பெரும் பட்டாளமே வருகிறார்கள்.
ஹியூமனாய்டு ரோபோ சண்டைக் காட்சிகள் தொடங்கி மலைகிராமத்தின் இருள் வரை கண்முன் நிறுத்துகிறார். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். அனிருத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்தவை. பின்னணி இசையில் பிரமாண்டம் காட்டி இருக்கிறார். விஜய் தனது ரசிகர்களுக்கு வைத்திருக்கும் கடைசி விருந்து செம மாஸ். திட்டமிட்டபடி தேர்தலுக்கு முன்பு வந்திருந்தால், விஜய்க்கு தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கலாம்.