‘லெனின் பாண்டியன்’ படத்தில் சிவாஜி பெயரை தர்ஷன் காப்பாற்றி உள்ளார்: இளையராஜா பாராட்டு

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

படம் வரும் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அண்ணா எப்போதும் நேரத்தை மிகவும் கடைப்பிடிப்பவர். நான் தினமும் சரியாக 7 மணிக்கு எனது ஸ்டூடியோவிற்கு செல்வேன். ஒருநாள் ஐந்து நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. காரில் இருந்து இறங்கும்போது சிவாஜி அண்ணா நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், “ராசா, நீயுமா லேட்டு?” என்று கேட்டார். இத்தனை ஆண்டுகளாக நேரத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்னை விட சீக்கிரம் வந்து என்னிடமே இப்படிக் கேட்கிறாரே என்று அந்த நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சிவாஜி அண்ணா நடிப்பைப் பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். ஒரு நடிகர் புதிதாக அறிமுகமாகும்போது, “யாருப்பா இது?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இருக்க வேண்டும். அதன்பிறகு அந்த நடிகரைப் பார்த்து, “யாரு இந்த ஆள்?” என்று வியக்கும் அளவுக்கு அவரது நடிப்பு வளர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய கலைஞர் சிவாஜி கணேசன்.
அவருடைய குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தர்ஷனின் நடிப்பை இந்தப் படத்தில் பார்த்தேன். சிவாஜி அண்ணாவின் பெயரையும், அந்த நடிப்பு வம்சாவளியையும் காப்பாற்றும் வகையில் தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய அன்புத் தம்பி தர்ஷன் கணேசன் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

என் தம்பியை பற்றி சொல்ல வேண்டியதில்லை அவரும் நன்றாக நடித்துள்ளார். “லெனின் பாண்டியன்” போன்ற ஒரு மாறுபட்ட கதைக்களம் கொண்ட படத்தை உருவாக்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் பாலச்சந்திரனுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.