கோல்டு கால்: தங்கம் தங்கம்தான்

புதுமுகங்கள் சில நேரங்களில் ஆச்சர்யப்படுத்தி விடுவார்கள். எதிர்பாராத ஒன்றை கொடுத்து விடுவார்கள். ஒரு தலை ராகம், சேது மாதிரியான படங்கள் அப்படி கண்டெடுக்கப்பட்டவை. அந்த வரிசையில் வந்திருக்கிற படம் ‘கோல்ட் கால்’. தினம்தோறும் நாம் சந்திக்கும் விற்பனை பிரதிநிதிகளுக்கு பின்னால் இருக்கும், வாழ்க்கையையும், வலியையும் முதன் முறையாக பேசி இருக்கும் படம்.

புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள். அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா ஆகியோர் படத்தை அலங்கரி’கும் நாயகிகள்.

பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் விற்பனையாளர் பணியில் சேரும் வெவ்வேறு மாநிலத்தை நான்கு பேரும் நண்பர்களாகிறார்கள். விற்பனையாளர்கள் பணி கடினமானது என்றாலும், நான்கு நண்பர்களும் அதை மகிழ்ச்சியாக செய்கிறார்கள். இருப்பினும் அவர்களது நிறுவனம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்காததால் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
இதற்கிடையே, தொழிலதிபர் ஒருவரது மகன் கடத்தப்பட, அந்த கடத்தல் குற்றத்தின் பின்னணியில் நான்கு நண்பர்கள் இருப்பதாக காவல்துறை அறிவிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த காவல்துறையும் நான்கு பேரையும் தேடுகிறது. பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக, தங்களது விற்பனையாளர் பணி மற்றும் அதற்கான பயிற்சியை பயன்படுத்தி தங்கள் மீது விழுந்த பழியை போக்கி, கடத்தப்பட்ட சிறுவனையும் காப்பாற்ற முடிவு செய்யும் நண்பர்கள், அதில் வெற்றி பெற்றார்களா ? இல்லையா ? என்பதை காமெடியாக சொல்கிறது படம்.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா என்று நான்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான் கதையின் நாயகர்கள் என்பதால் அந்த மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களாக தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். நான்கு பேரும் ஒவ்வொரு வகையில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
சரவணனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும் இருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை, விற்பனையாளர்கள் பணி எப்படி இருக்கும், என்று சொல்லாமல் அவர்களது வாழ்வில் நடக்கும் எளிய சம்பவங்களையும், மறக்க முடியாத நிகழ்வுகளையும், இனிமையான அனுபவமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். இது அவரது சொந்த அனுபவங்களின் தொகுப்பு.
சிறிதான ஒரு கிரைம் த்ரில்லரோடு விற்பனை பிரதிநிதிகளின் பிரச்சினைகளையும் பேசிய விதத்தில் இது தங்கமான படமாகிறது.

Leave A Reply

Your email address will not be published.