சிங்காரம்: எளிய மனிதர்கள் வலி நிறைந்த வாழ்க்கை

தினம்தோறும் சாலையின் ஓரங்களில், கோவில்களில், மார்க்கெட்டுகளில் பாசி மணி ஊசி விற்கும் நரிக்குறவர்களை பார்த்திருக்கிறோம். அவர்கள் யார்? எப்படி வாழ்கிகறார்கள் என்பதை பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறோமா. அப்படியானவர்ளைப் பற்றி யோசித்து, அவர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் கே.வி.கதிர்வேலு.

மாவீரன் சிவாஜியின் படைவீரர்களாக இருந்து, பின்பு இஸ்லாமிய மன்னர்களின் அடிமைகளாக இருந்து பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்தவர்கள்தான் நரிக்குறவர்கள் என்ற வரலாற்றோடு படம் தொடங்குகிறது. எம்.எஸ்.பாஸ்கர், தீபா சங்கரின் மகன் சிங்காரம் எனப்படும் யோகி பாபு. ஊர் ஊராக சென்ற அங்கு சில காலம் தங்கி பிழைத்து வருகிறார்கள். அப்படி ஒரு ஊருக்கு வரும்போது அந்த ஊர் அரசியலாலும், ஜாதியாலும் பிளவுபட்டு கிடக்கிறது. அதில் மாரிமுத்து பிரிவினர் இவர்களை ஊரை விட்டு துரத்த நினைக்கிறார்கள், வேல ராமமூர்த்தி அவர்களுக்கு உதவ நினைக்கிறார். அடையாளமும், முகவரியும் இல்லாத இவர்களுக் அந்த இரண்டையும் தருகிறார்.

இந்த நிலையில் எம்.எஸ்.பாஸ்கருக்கு லாட்டரியில் ஒன்னறை கோடி பணம் பரிசாக கிடைக்கிறது, வேல.ராமமூர்த்தி யோகி பாபு மூலம் அந்த சமுதாயத்திற்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தர முன்வருகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. நரிக்குறவர்களின் வாழ்க்கை சூழுலை இதுவரை எந்த படமும் பேசியிராத அளவிற்கு இந்தப் படம் பேசியிருக்கிறது.

யோகி பாபுவின் இன்றைய சம்பளம், பெரிய ஹீரோக்களின் படம் இவற்றை விட்டு இந்தப் பட்ததில் நடித்திருப்பது அவரது சமூக அக்கறையை காட்டுகிறது. நரிகுறவர் சமுத்தாயத்தை சேர்ந்த சிங்காரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். லாட்டரி பரிசுக்கான மாற்றத்தையும் பளிச்சென காட்டியிருக்கிறார். மற்றவர்கள் முன்னால் கூனி குறுகி நிற்கும்போது சின்ன சின்ன முகபாவத்திலேயே உணர்வுகளை கொட்டி இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்சர் அசல் நரிக்குறவராகவே மாறி இருக்கிறார். செண்ட்ராயன், மாரிமுத்து, படவா கோபி ஆகியோர் வில்லத்தனம் காட்டுகிறார்கள். சார்ம்சும், ஆர்த்தி கணேசும் சிரிக்க வைக்கிறார்கள்.

மக்கள் திலகம் எம்ஜிஆரை ஏன் தெய்வமாக வணங்குகிறார்கள் என்பதில் தொடங்கி அவர்கள் மக்கள் மீது காட்டும் கரிசம், கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியா ஏற்றுக் கொள்ளும் மனம் என அவர்களை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார்கள். சாம் சி.எஸ்.சின் பின்னணி இசையும், பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் கொண்டாடப்பட வேண்டிய படம்.

Leave A Reply

Your email address will not be published.