பாரிஸ் காஃபே : சமூக பாடம்

அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதற்கிடையே, மருத்துவ கருத்தரங்கம் ஒன்றுக்காக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸுக்கு செல்லும் குரு சோமசுந்தரம், அங்கிருக்கும் காஃபே ஒன்றில், மகிழ்ச்சியாக இருக்கும் சென்னையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார். தன் மனைவியிடம் அந்த காதல் ஜோடி பற்றிய உண்மைகளை சொல்கிறார்.

அதன்பிறகு அனுமோல், குரு சோமசுந்தரத்தின் மீது கோபமடைந்து, அவரை விட்டு பிரிந்து சென்று விடுகிறார். உண்மையில் அந்த காதல் ஜோடி யார்? அவர்களுக்கும் குரு சோமசுந்தரம் தம்பதிக்கும் என்ன உறவு என்பதுதான் படத்தின் கதை.

ஒரு திரிலிங்கான கதையுடன் முதல் படத்திலேயே சமூகப் பிரச்சனைப் பற்றி பேசியிருக்கிறார், இயக்குநர் சரஜ் சீலன். கணவன் – மனைவியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் குரு சோமசுந்தரமும், அனுமோலும். குற்றம் என்றாலும் குடும்பத்திற்காக செய்து விட்டு, அதே குடும்பத்திற்காக குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்கவும் தயாராக இருக்கும் குரு சோமசுந்தரம், தன் அளவான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார்.

இளம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் விஜய் விஷ்வா மற்றும் அர்ச்சனா வரும் காட்சிகள் கலர்புல் ரகம். மற்றொரு ஜோடியான சாய் விக்கி மற்றும் நயனா சாய் இதயத்தை கனக்க செய்யும் விதத்தில் நடித்திருக்கிறார்கள். கே இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்கள். பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் சரஜ் சீலன், அதை ஒரு பிரச்சாரமாக்காமல், வலுவான திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.